துண்டிக்கப்பட்ட இணைப்பை சரி செய்யாத கேபிள் ஆபரேட்டருக்கு ரூ.10,000 அபராதம்! நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பு! - CONSUMER COURT JUDGEMENT
துண்டிக்கப்பட்ட கேபிள் டிவி இணைப்பை சரி செய்து தராத கேபிள் ஆபரேட்டருக்கு ரூ.10,000 அபராதம் விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
![துண்டிக்கப்பட்ட இணைப்பை சரி செய்யாத கேபிள் ஆபரேட்டருக்கு ரூ.10,000 அபராதம்! நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பு! மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/07-02-2025/1200-675-23492874-thumbnail-16x9-srivi-aspera.jpg)
Published : Feb 7, 2025, 3:15 PM IST
ஸ்ரீவில்லிபுத்தூர்: துண்டிக்கப்பட்ட டிவி கேபிள் இணைப்பை சரி செய்யாததால் புகார்தாரருக்கு 10,000 ரூபாய் வழங்கவும்,துண்டிக்கப்பட்ட இணைப்பை சரி செய்யவும் கேபிள் டிவி ஆபரேட்டருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் முருகேசன். இவர் தனது வீட்டிற்கு டிவி கேபிள் இணைப்பு பெற்று மாதந்தோறும் சந்தாவாக 240 ரூபாய் செலுத்தி வந்துள்ளார். சில சேனல்கள் தெரியாததால் கேபிள் ஆபரேட்டரிடம் கேட்டபோது அவர் வயரை மாற்ற வேண்டும் என கூறி இணைப்பை துண்டித்துள்ளார். ஆனால், அவர் அதனை சரி செய்து தரவில்லை. இது குறித்து கேபிள் ஆபரேட்டரிடம் பல முறை புகார் அளித்தும் அவர் மீண்டும் கேபிள் இணைப்பை சரி செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
துண்டிக்கப்பட்ட இணைப்பு சரி செய்யப்படாததால் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இது குறித்து முருகேசன் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சக்கரவர்த்தி, சிவகாசி சப்தகிரி கேபிள் விஷன் உரிமையாளர் விவேகன்ராஜ், மனுதாரர் முருகேசன் வீட்டிற்கு 6 வார காலத்திற்கு கேபிள் இணைப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் முருகேசனின் மன உளைச்சலுக்கு 5000 ரூபாயும், வழக்கு செலவு தொகை 5000 ரூபாயும் வழங்க வேண்டும் எனவும் உத்தர பிறப்பித்தார்.