திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில், ரஷ்ய மற்றும் இந்திய நாட்டின் அணுசக்தி உயர்மட்ட அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. நேற்று தொடங்கிய இந்த கூட்டம், தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது.
இதில் ரஷ்ய அணுசக்தி கழகத்தின் தலைமைச் செயல் இயக்குநர் அலெக்ஸ் லிக்காசேவ், இந்திய அணுசக்தி துறைத் தலைவர் மற்றும் செயலாளருமான மருத்துவர் அஜீத்குமார் மொகந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனையின் முதல் நாள் கூட்டத்தில் ரஷ்யாவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான அணுசக்தித் துறையில் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், கூடங்குளத்தில் கட்டப்பட்டு வரும் அணு உலைகளின் கட்டுமானத்தை விரைந்து செயல்படுத்துவது குறித்தும், உதிரி பாகங்கள் வழங்குவது பற்றியும் ஆலோசனை நடைபெற்றது. இதனையடுத்து நடைபெற்ற 2வது நாள் ஆலோசனைக் கூட்டத்தில், கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் அமைப்பது குறித்தும், இந்தியாவின் பிற பகுதிகளில் ரஷ்ய தொழில்நுட்பத்தில் அணு உலைகள் அமைப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது.