விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த வி.அகரம் பள்ளிக்கூடத் தெரு பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகன் சாரதி(28), கட்டடத் தொழில் செய்து வருகிறார். இவர், கடந்த 23-ஆம் தேதி வளவனூரை அடுத்த கெங்கராம்பாளையம் பகுதியில் ஸ்ரீதரின் என்பவரின் விவசாய நிலத்தில் மோட்டார் கொட்டகை கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கிருந்த நீளமான இரும்புக் கம்பியை தூக்கியபோது, மேலே சென்ற உயர் மின்னழுத்த கம்பியில் இரும்புக் கம்பி உரசியதில் உடலில் மின்சாரம் பாய்ந்து சாரதி பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து அவர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் தீவிர சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருப்பினும், அங்கு சாரதி கடந்த புதன்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வளவனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.