தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“தமிழகத்தில் காங்கிரஸ் வலுவடைய வேண்டும்”.. பொதுக்குழு கூட்டத்தில் மூத்த தலைவர்கள் வலியுறுத்தல்! - TNCC meeting in chennai

TNCC general meeting: வரும் காலங்களில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட தேர்தல்களில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்கள்
காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்கள் (Credits - Selvaperunthagai 'X' Page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 11, 2024, 9:58 PM IST

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்றது. இதில், சசிகாந்த் செந்தில், ஜோதிமணி, விஜய் வசந்த் உள்ளிட்ட வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, ராகுல் காந்தி மட்டுமே காங்கிரஸ் மக்களவைத் தலைவர், இந்தியா கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி, தமிழகத்தை வஞ்சிக்கும் போக்கை ஒன்றிய அரசு கைவிட வேண்டும், நீட் தேர்வு குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கும் உரிமை வழங்க வலியுறுத்தல் உள்ளிட்ட ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பொருந்தகை, "நாம் பிறரைச் சார்ந்தே இருக்கப் போகிறோமா அல்லது சுயமாக இருக்கப்போகிறோமா? கூட்டணிக் கட்சிகளில் தோழமை என்பது வேறு, நாம் கூட்டணிக் கட்சிகளைச் சார்ந்தே இருக்கப் போகிறோமா என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்" என கட்சித் தொண்டர்களிடம் கூறினார்.

தொடர்ந்து பேசிய கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, "காங்கிரஸ் கட்சி இழந்த கண்ணியத்தை தலைவர் ராகுல் காந்தி மீட்டு உள்ளார். இந்த வெற்றியைக் கொண்டாடுவதற்கு நமக்கு முழுத் தகுதியும், உரிமையும் இருக்கிறது. ஆட்சி அமைக்காவிட்டாலும், ஒரு பெரு மகிழ்ச்சியில் நமது இந்தியா கூட்டணி இருக்கிறது. ஆனால், பாஜக ஆட்சி அமைத்தாலும் சோகத்தில் மூழ்கியுள்ளது" எனக் கூறினார்.

மூத்த தலைவர்களின் அறிவுரை: பின்னர் பேசிய பீட்டர் அல்போன்ஸ், "மதவாத பாசிச கட்சியை தலையில் அடித்திருக்கிறோம். மதவாத அடிப்படையில் எப்படி வாக்குகளைப் பெறலாம் என மோடி முயற்சித்தார். ஒரு மாற்று சித்தாந்தத்தை எடுத்துக் கூறியவர் ராகுல் காந்தி தவிர, வேறு எந்த காங்கிரஸ்காரரும் இல்லை. மோடி அரசை எப்படி வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று எண்ணிய பிறகு தான் நாம் ஓய்வெடுக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் எந்தெந்த இடங்களை வாங்க வேண்டும் என்று இப்போதே திட்டமிடுங்கள்" என அறிவுறுத்தினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, "தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இது போன்ற கலந்தாய்வுகள் தான் மன எழுச்சியைத் தரும். அதற்காக செல்வப்பெருந்தகைக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் கூட்டணி அமைத்து நாம் பெற்ற வெற்றி மற்ற மாநிலங்களில் பெற முடியவில்லை, இதைப் பற்றி சிந்திக்க வேண்டும். அயோத்தியில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். ராகுல் காந்தி நடைபயணம் செய்யும்போது யாரையும் தாக்கி பேசவில்லை. அவர் செய்தது அரசியலுக்கான நடைபயணம் அல்ல, மக்களை ஒன்று சேர்ப்பதற்கான நடைபயணம்.

காந்தி ஒரு இந்து, கோட்சே ஒரு இந்துத்துவவாதி என்று ராகுல் காந்தி சொன்னார். என்னுடைய நாடு மதச்சார்பற்ற நாடாகத்தான் இருக்கும் என காந்தி சொன்னார். இந்த தேசத்தை ஆர்எஸ்எஸ் கைப்பற்ற வேண்டும் என்று நினைத்தார்கள். இவ்வளவு கட்சிகளை ஒன்று சேர்த்த ராகுல் காந்தி காங்கிரசையோ, தன்னையோ முன்னிலைப்படுத்த நினைக்கவில்லை.

காங்கிரஸும் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒன்றாக இருக்கிறோம். நாமும், மம்தாவும் ஒன்றாக இருக்கிறோம், நமக்குள் ஏராளமான வேற்றுமை இருந்தாலும் ஒன்றாக இருக்கிறோம். மதச்சார்பின்மை என்ற நேர்கோட்டில் இந்த மகத்தான வெற்றியை நம்மால் பெற முடிந்தது. கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது என்றால் அது தமிழ்நாட்டில் தான்.

நாம் வலிமை பெறுவதற்கும், கூட்டணிக்கும் சம்பந்தமில்லை. கூட்டணி வேறு, நம்முடைய வலிமை என்பது வேறு. தமிழகத்தில் நமக்கு ஒரு வேர் இருக்கிறது. அது பெருந்தலைவர் காமராஜரால் உருவாக்கப்பட்ட வேர். ஆதரவு வேறு, அமைப்பு வேறு, எந்த ஒன்றையும் வாக்காக மாற்றக்கூடிய சக்தியை நாம் பெற வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி மாற்றம் ஏன்? - சபாநாயகர் அப்பாவு விளக்கம்!

ABOUT THE AUTHOR

...view details