கோயம்புத்தூர்:கடந்த செப்.11ஆம் தேதி நடைபெற்ற தொழில் துறையினர் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் ஜிஎஸ்டி குறித்து பேசினார். அது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதுமட்டுமின்றி, அவர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வானதி சீனிவாசனிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
செல்வப்பெருந்தகை பேட்டி (Photo Credits - ETV Bharat Tamil Nadu) இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பாஜகவினரைக் கண்டித்து காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் கோவை காந்தி பார்க் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஆர்ப்பாட்டத்தில் "பன் மாலை" அணிந்தும், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு "க்ரீம் பன்னையும்" வழங்கினர்.
ஆர்ப்பாட்டத்தில் செல்வப்பெருந்தகை பேசியதாவது, “வானதி சீனிவாசன் இந்த தொகுதியில் உள்ள அன்னபூர்ணா தொழிலாளர்களிடமும் வாக்கு கேட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆகியுள்ளார். இதெல்லாம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தெரியாது. காரணம், அவர் தேர்தலில் மக்களைச் சந்திப்பதில்லை. எந்த தேர்தலிலும் அவர் போட்டியிட மாட்டார். கொல்லைப்புறம் வழியாக அமைச்சராகியுள்ளார்.
இதையும் படிங்க:பன் + க்ரீம் வீடியோ சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்னபூர்ணா நிர்வாகம்!
ஆனால், மக்களை தினம் தினம் சந்திக்கிறேன் எனக் கூறும் வானதி சீனிவாசனுக்கு இது தெரியாமல் எப்படி போனது? அன்னபூர்ணா சீனிவாசன் தனது துறை சார்ந்த பிரச்னைக்கு நியாயம் கேட்டுள்ளார். தவறாக அவர் ஏதும் பேசவில்லை. ஆனால், அவரை மிரட்டி விடுதிக்கு வர வைத்து மன்னிப்பு கேட்க வைத்ததோடு, அதனை வீடியோவாக வெளியிட்டு தங்களது ஆணவத்தின் உச்சத்தை காட்டியுள்ளனர்” இவ்வாறு தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து செல்வப்பெருந்தகை கூறியதாவது, “அன்னபூர்ணா சீனிவாசனை மன்னிப்பு கேட்க வைத்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கோவை மக்களிடம் மன்னிப்பு கேட்க சொல்ல வேண்டும். அன்னபூர்ணா சீனிவாசனை மன்னிப்பு கேட்க கூறியது தவறு. அவரே பெருந்தன்மையாக மன்னிப்பு கேட்டிருந்தாலும் அதனை வீடியோவாக வெளியிட்டது மிகப்பெரிய தவறு.
உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் நாடு தழுவிய போராட்டமாக இது முடியும். அவர் அடிமையா? இந்த தேசத்திற்கு வரி கட்ட கூடியவர். பல்லாயிரம் தொழிலாளிக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தருபவர். அவர் ஏன் கூனிக்குறுகி அமர வேண்டும். ஒரு நிதி அமைச்சரை சந்திக்க மற்ற கட்சியினர் செல்ல முடியுமா? இதை திட்டமிட்டு செய்துள்ளனர். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், “GST சம்பந்தமான தொழில் அமைப்புகள் சந்திப்பு வெற்றி பெற்றதை பொறுத்துக் கொள்ள முடியாத காங்கிரஸ் கட்சி இன்று மக்களை திசை திருப்ப ஆர்ப்பாட்டங்கள் நடத்துகிறது. கொங்கு மண்டலத்தின் வளர்ச்சிக்கு பாஜக கட்சி மற்றும் பிரதமர் மோடி அரசு உறுதுணையாக இருப்பார்கள். இந்த போலி போராட்டங்களால் மக்களை ஏமாற்ற முடியாது” என எம்எல்ஏ வானதி சீனிவாசன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.