- சென்னை: மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஒலிம்பிக்கில் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பதை கண்டித்தும், அதற்கு நியாயம் கேட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விளையாட்டு துறையின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சத்தியமூர்த்தி பவனில் இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விளையாட்டு துறையின் தலைவர் பெரம்பூர் நிஷா தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை கூறுகையில், "ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவை சார்ந்த வீராங்கனை வினேஷ் போகத் உலகப் புகழ் பெற்ற பல வீரர்களை வீழ்த்தி இந்தியாவிற்கு பெருமை சேர்க்கின்ற விதமாக அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.
இந்த அறிவிப்பு வந்த பிறகு, அவர் எடையை சோதனையிட்டு 100 கிராம் அதிகமாக இருக்கிறார் என்று உலகத்திலேயே எங்கும் இல்லாத ஒரு நீதியை அந்த வீராங்கனைக்கு எதிராக வழங்கி தகுதி நீக்கம் செய்து இருக்கிறார்கள். எப்போதுமே வீரர்கள் வீராங்கனைகள் பயிற்சியில் ஈடுபடும்போது அதற்கு முன்பாக பரிசோதனை செய்வார்கள்.
அந்த பரிசோதனைக்கு பிறகுதான் இவர் அந்த போட்டியில் கலந்து கொள்ளலாமா என்ற சான்றிதழை வழங்குவார்கள். ஆனால் இங்கு தலைகீழாக அரையிறுதி சுற்றுக்கு சென்ற பிறகு பரிசோதனைக்கு அனுப்புங்கள் என்று 100 கிராம் எடை கூடி உள்ளது என்று தகுதி நீக்கம் செய்திருக்கிறார்கள். எதற்காக இந்தியா வாய் திருக்கவில்லை மோடி அரசு எதற்காக இன்னும் கண்டனம் தெரிவிக்கவில்லை.