சென்னை:காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையை, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்று விமர்சித்தது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் இன்று (புதன்கிழமை) அண்ணாமலையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த வகையில், சென்னை காரம்பாக்கத்தில் தென்சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், மாநிலச் செயலாளர் பாஸ்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்று அண்ணாமலையைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.
பின்னர், அண்ணாமலையின் உருவப் படத்திற்கு செருப்பு மாலை அணிவித்தும், செருப்பால் அடித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை அடுத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஸ்கர், "இந்தப் போராட்டம் அண்ணாமலை மன்னிப்பு கேட்கும் வரை தொடரும். அவர் எங்கள் தலைவரை மட்டும் பேசவில்லை. முதலமைச்சர் உட்பட அனைவரைப் பற்றியும் அவதூறாக பேசுகிறார். பெரிய சர்வாதிகாரி போல நடந்துகொள்கிறார். அவரை தமிழக மக்கள் அனைவரும் சேர்ந்து கர்நாடகாவுக்கு விரட்ட வேண்டும்" என்று தெரிவித்தார்.
தேனியில் போராட்டம்:தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் நகரின் முக்கிய பகுதியில் கூடி அண்ணாமலைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனிடையே, உருவ பொம்மையை எரிப்பதை தடுக்கும் விதமாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், ஆட்டோவில் மறைத்து வைத்துக் கொண்டு வந்த அண்ணாமலையின் உருவ பொம்மை, அதேபோல் உணவகம் ஒன்றில் மறைத்து வைத்திருந்த உருவ பொம்மை ஆகியவற்றைக் கைப்பற்றி அதன் மீது தண்ணீர் ஊற்றி எரிப்பதை தடுத்தி நிறுத்தினர்.