விருதுநகர்: சிவகாசியில் தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் 4வது பாதுகாப்பு விழிப்புணர்வு மாநாடு மற்றும் வர்த்தக கண்காட்சி நடைபெற்றது. இதனை விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் துவக்கி வைத்தார். இதில், சிவகாசி மேயர் சங்கீதா, தீயணைப்பு, மீட்புத்துறை மாவட்ட அலுவலர் விவேகானந்தன் கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றினர். தொடர்ந்து பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கூறியதாவது, “பட்டாசு தொழிலை பாதுகாப்பது எவ்வளவு முக்கியமோ, அதேபோல் பட்டாசுகளை விற்பனை செய்கின்ற வணிகர்களின் பாதுகாப்பு மிக மிக முக்கியமானது. வணிகர்களின் முக்கிய பிரச்னையாக இருப்பது, பட்டாசு கடைகளுக்கு உரிமம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவது.
குறிப்பாக, தமிழக அரசு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் வட மாநிலங்கள் என அனைத்து மாநிலங்களும், தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே பட்டாசு கடைகள் அமைப்பதற்கான உரிமத்தை வழங்க வேண்டும். காலதாமதம் செய்வதால் பட்டாசு வணிகர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதன் விளைவாக, சிவகாசியில் தொழில் பாதிக்கப்படுகிறது. எனவே, இது குறித்து தமிழக அரசு உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு எனது சார்பாக கடிதங்கள் அனுப்பி வைக்க உள்ளேன்.
பாஜக அரசு ஆட்சிக்கு வந்து பட்டாசுக்கு வெடி வைத்தது போல், பட்டாசு தொழிலுக்கும் வெடி வைத்துள்ளது. மத்திய அமைச்சர் சுரேஷ் கோபியின் பேச்சு வருத்தத்துக்குரிய செயலாகும். பேரியம் நைட்ரேட்டை ஒரு தடை செய்யப்பட்ட பொருளிலிருந்து மாற்ற வேண்டும். அவ்வாறு மாற்றினால் தான் பட்டாசு தொழிலை பாதுகாக்க முடியும். மத்திய பாஜக அரசு தொடர்ந்து பட்டாசு தொழிலுக்கு விரோதமான நிலையிலேயே இருந்து வருகிறது.