தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ ஆவது என் கையில்? - அமைச்சர் துரைமுருகன் சொன்ன பதில் என்ன? - TAMIL NADU ASSEMBLY

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை நான் மீண்டும் எம்.எல்.ஏ ஆவதற்கு திருப்புகழ் கமிட்டி அறிவுறுத்தல்படி ஸ்ரீபெரும்புதூரில் அமைச்சர் துரைமுருகன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார்.

எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை, அமைச்சர் துரைமுருகன்
எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை, அமைச்சர் துரைமுருகன் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 10, 2024, 12:24 PM IST

சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்றும், இன்றும் (டிசம்பர் 9, 10) என இரண்டு நாட்களுக்கு நடைபெற்றது. இரண்டாம் நாளாக இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடர் காலை 9.30 மணியளவில் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, கேள்வி நேரத்தின்போது சட்டப்பேரவை உறுப்பினர்கள் கேள்விகள் எழுப்பிய நிலையில் அவற்றுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்தனர்.

அதில் ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் செல்வப்பெருந்தகை, "கடந்த வாரம் பெய்த மழையால் வரதராஜபுரம் பகுதியில் உள்ள முல்லை நகர், தனலட்சுமி நகர், பிடிசி நகர், அஸ்டலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டது. இது குறித்த பத்திரிக்கை வெளியீடுகள், புகைப்படங்களை பேரவைத் தலைவருக்கு காட்டினேன்.

இந்த வெள்ள பாதிப்பால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஒரு வருடத்திற்கு முன் எங்கள் பகுதியில் மழை பெய்தால், மழைநீர் 10 நாட்களுக்கு தேங்கி நிற்கும். ஆனால், தற்போது ஒரு நாளில் வெளியேறுகிறது. இது வரவேற்கத்தக்கது. ஆனால், திருப்புகழ் கமிட்டி குறிப்பிட்டுள்ள பகுதிக்குள் எங்கள் பகுதி அடங்கும்.

எனவே, திருப்புகழ் கமிட்டி அறிவுறுத்தல்படி ஒரத்தூர் ஏரி, கடப்பா ஏரி, மணிமங்கலம் ஏரியை நீர் தேக்க ஏரியாக மாற்றி, எங்கள் பகுதியில் மழைநீர் சுத்தமாக தேங்கி நிற்காதபடி அமைச்சர் துரைமுருகன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் அமைச்சர் துரைமுருகன் நிச்சயம் இந்த நடவடிக்கையை விரைந்து செய்வார் என மக்களுக்கு வாக்கு கொடுத்துள்ளேன். வருகின்ற நிதி நிலை அறிக்கையில் அமைச்சர் திருப்புகழ் கமிட்டி அறிவுறுத்தலை நிறைவேற்றுவார் என எங்கள் மக்களுக்கு நான் உத்தரவாதமும் அளித்துள்ளேன். எனவே, நான் மீண்டும் அடுத்த முறை சட்டப்பேரவை உறுப்பினராவது தற்போது அமைச்சர் துரைமுருகன் கையில்தான் உள்ளது,” என்றார்.

இதையும் படிங்க:"உ.வே.சாமிநாதர் பிறந்த நாள் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும்" - முதலமைச்சர் அறிவிப்பு!

இதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், என்னிடம் வசமாக மாட்டிக்கொண்டார் என நகையாடினார். தொடர்ந்து பேசிய அவர், திருப்புகழ் கமிட்டியானாலும் சரி, திருவாசகம் கமிட்டியானாலும் சரி, உங்களின் பிரச்னை எனக்கு தெரியும். அந்த வகையில், செல்வப்பெருந்தகை மீண்டும் சட்டப்பேரவை உறுப்பினர் ஆவது என் கையில் உள்ளது. கவலைப்பட வேண்டாம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். துறை சார்ந்த அரசு அலுவலர்களை அழைத்து பேசியுள்ளேன் என்று செல்வப்பெருந்தகைக்கு பதிலளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details