திருச்சி:திருச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை நிகழ்ச்சி நேற்று (அக்.5) மாலை நடைபெற்றது. இந்த பாதயாத்திரையானது உறையூர் குறத்தெரு அருகே தொடங்கிய அரசு மருத்துவமனை அருகே உள்ள காந்தி அஸ்தி மண்டபத்தில் நிறைவடைந்தது.
இந்த பாதயாத்திரையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த பாதயாத்திரையின் நிறைவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் எம்பி திருநாவுக்கரசர் கூறுகையில், “இந்தியாவில் காங்கிரஸ் கட்சிக்கான ஆதரவு அதிகமாகி கொண்டு வருகிறது.
பாஜக திசை திருப்புகிறது: ராகுல் காந்தி மத்திய அரசை விமர்சனம் செய்தால், அவர் இந்தியாவை விமர்சனம் செய்வதாக பாஜகவினர் திசை திருப்புகின்றனர். இந்தியாவை பற்றி விமர்சனம் செய்வது வேறு, அரசை விமர்சனம் செய்வது வேறு, இரண்டும் ஒன்றல்ல.
பவன் கல்யாண் திடீர் பிள்ளையார்:குறிப்பிட்ட மதம் மொழிக்கான அரசாங்கம் போல பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. பவன் கல்யாண் திடீர் பிள்ளையார் போல் கட்சி தொடங்கினார். அதிர்ஷ்டவசமாக அவர் வெற்றியும் பெற்றுள்ளார். மேலும் தற்போது சந்திரபாபு நாயுடுவின் பெருந்தன்மையால் அவர் துணை முதலமைச்சராக பதவியில் உள்ளார். தமிழ்நாட்டு தலைவர்களை விமர்சனம் செய்யக்கூடிய அளவிற்கு பவன் கல்யாண் தேசிய அளவில் பெரிய தலைவர் ஒன்றும் அல்ல. அதனால்தான் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் அவரின் கருத்தை புறந்தள்ளிவிட்டு போய்விட்டார்.