சென்னை: திருவொற்றியூர் தொகுதிக்கு உட்பட்ட எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் எண்ணூர், எர்ணாவூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான கர்ப்பிணிகள் இந்த மையத்தில் மருத்துவ பரிசோதனைக்காக வருகின்றனர்.
இந்த நிலையில், எர்ணாவூரைச் சேர்ந்த மஞ்சுளா அர்ஜுன் என்ற கர்ப்பிணி ஒருவர், இன்று (மே 21) சுனாமி குடியிருப்பில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்திற்கு பரிசோதனைக்காக வந்துள்ளார். அப்போது, அவரை கத்திவாக்கத்தில் உள்ள சுகாதார மையத்திற்குச் சென்று, அங்கு பதிவு செய்து பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு செவிலியர்கள் வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக அவரது குடும்பத்தினர் சுகாதார மையத்திற்கு வந்து கேட்டபோது, மண்டல சுகாதாரத்துறை அதிகாரிக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்பொழுது, செவிலியர்கள் தங்களிடம் கனிவாகப் பேசுவதில்லை என்றும், தங்களை தரக்குறைவாக பேசுகிறார்கள் என்றும் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும், போதிய இருக்கைகள் இல்லாததால் ஆரம்ப சுகாதார மைய செவிலியர்கள், பரிசோதனை செய்ய வரும் கர்ப்பிணிகளை தரையில் அமர வைப்பதாகவும் பொதுமக்கள் அதிகாரியிடம் புகார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிபவர்களின் செயலைக் கண்டித்து பொதுமக்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:புத்திசாலித்தனமாக தப்புவதாக நினைத்து 23 கிலோ கஞ்சாவுடன் சிக்கிய இருவர்.. வேலூரில் நடந்தது என்ன?