சென்னை:சென்னை மாநகராட்சியில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில், மாநகராட்சி உயர் அதிகாரிகளின் வீடுகளில் பாத்திரம் கழுவுதல், வீடு பராமரிப்பு, கழிவறை கழுவுதல், துணி துவைத்தல் போன்ற வேலைகளுக்கு இந்த ஒப்பந்த ஊழியர்களை தினமும் பணிக்கு அழைத்துச் செல்வதாக புகார்கள் எழுந்துள்ளது.
தற்போது, தூய்மைப் பணியாளர்கள் அதிகாரிகளின் வீடுகளில் வேலை செய்வது குறித்து சென்னை மாநகராட்சி செங்கொடி சங்க பொதுச் செயலாளர் சீனிவாசன் ஈடிவி பாரத் ஊடகத்திடம் பேசிய போது, "சென்னை மாநகராட்சி உயர் அதிகாரிகளில் வீடுகளில் ஒப்பந்த ஊழியர்கள் பணிக்குச் செல்வது என்பது பல வருடங்களாக நடந்து வருகிறது.
சில நேரங்களில் புகார்கள் எழுந்தால் அந்த மாதங்களில் மட்டுமே பணிக்குச் செல்வோர் எண்ணிக்கை குறைக்கப்படும். ஆனால், அவர்கள் இல்லத்திற்கு பணிக்கு அனுப்புவது தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. தற்போது அதைத் தடுக்க முடியாத நிலையில் உள்ளது. மாநகராட்சியில் அதிகாரிகளின் வீடுகளில் தூய்மைப் பணியாளர்களை வேலை வாங்குவது நீண்ட காலமாக நடைமுறையில் உள்ளது.
இதையும் படிங்க: சென்னை சாலைகளில் இனி பள்ளம் தோண்ட வேண்டாம்.. ஏன்?
பணி பறிபோகும் என்ற பயம்:தற்போதைய மாநகராட்சியின் அதிகாரிகள் மற்றும் முன்னாள் அதிகாரிகளின் வீடுகளுக்கு ஒப்பந்தப் பணியாளர்களை அனுப்பி துப்புரவு பணி, பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல், கழிவறை கழுவுவது உள்ளிட்ட பணிகளைச் செய்ய அனுமதிக்கின்றனர். மேலும், மாநகராட்சியில் இருந்து அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டாலும், ஊழியர்கள் தொடர்ந்து அங்கு பணியாற்றி வருகிறார்கள்.
ஐஏஎஸ் அதிகாரிகளின் வீடுகள் முதல் மண்டல அதிகாரிகளின் வீடுகள் வரை பணி செய்கின்றனர். இந்த நடைமுறையை சில கவுன்சிலர்களும் பின்பற்றுகின்றனர். ஒரு சிலர் இதற்கு விருப்பப்பட்டுச் சென்றாலும் பலர் கட்டாயப்படுத்தி பணிக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். அதிகாரிகளின் வீடுகளுக்கு வேலைக்குச் செல்ல மாட்டேன் என வெளிப்படையாகச் சொன்னால் எங்கே பணி பறிபோய் விடுமோ? என்ற பயத்தினால் அவர்களும் அதிகாரிகள் வீடுகளுக்கு வேலை செய்ய செல்கின்றனர். அப்படி அதிகாரிகளின் வீடுகளில் பணிபுரியும் அவர்களுக்கு கூடுதல் ஊதியம் வழங்கப்படுவதில்லை. ஆனால், கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டி வரும். இதனால் மாநகராட்சிப் பணிகள் பாதிக்கப்பட்டு வருகிறது.
மாநகராட்சி பணி பாதிப்பு: 100க்கும் மேற்பட்டோர் அதிகாரிகளின் வீடுகளுக்கு பணிகளுக்காகச் செல்கின்றனர். காலையில் அவர்கள் பணிகளுக்கு வரும்போது அவர்களின் வருகைப் பதிவேட்டில் ஓடி (OD) என பதிவு செய்துவிட்டு, அவர்களை அதிகாரிகள் வீடுகளுக்கு பணிக்கு அனுப்புவார்கள். ஒப்பந்தப் பணியாளர்களை அதிகாரியின் இல்லங்களுக்கு பணியில் அனுப்பக்கூடாது என பல்வேறு போராட்டங்களும், மனுக்களும் அளித்திருந்தோம். ஆனாலும், அவர்களை பணிக்கு அனுப்புவது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது" என ஆதங்கமாக தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்