சென்னை:சர்ச்சைக்கு பெயர் போன பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் சில நாட்களாக எந்த சர்ச்சையிலும் சிக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில், அவர் மீது புதிய புகார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.
டிடிஎப் வாசன் கடை: டிடிஎப் வாசனும், அவரது நண்பர் அஜீஸ் ஆகியோர் இணைந்து மதுரவாயல் அயப்பாக்கம் பகுதியில் ''டிடிஎப் பிட்சாப்'' என்னும் பெயரில் இருசக்கர வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் விற்பனை நிலையம் நடத்தி வருகின்றனர். இந்த விற்பனை நிலையத்தில், இருசக்கர வாகனங்களுக்குத் தேவையான சைலன்ஸர், ஹெல்மெட், ஜிபிஎஸ் கருவிகள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இங்கு சுற்றுவட்டாரப் பகுதியில் மட்டுமின்றி, பல வெளியூர்களில் இருந்தும் இளைஞர்கள் வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். இந்த நிலையில், ''எக்ஸ்'' வலைத்தளத்தில் நபர் ஒருவர், டிடிஎப் வாசன் நடத்தி வரும் உதிரிபாக கடையில் ஒலி மாசு ஏற்படுத்தும் வகையில் அதிக ஒலி எழுப்பக்கூடிய தடை செய்யப்பட்ட சைலன்ஸர்களை விற்பனை செய்து வருவதாக புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.