கோயம்புத்தூர்: கவுண்டம்பாளையம் விஏஒவாக லோகநாயகி உள்ளார். இவர் இதற்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதியில் விஏஒவாக பணியாற்றிய போது, வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக சுமார் 2.50 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாக, திருவாடானை பகுதியைச் சேர்ந்த ஹென்றி கஸ்பார் என்ற இளைஞர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
இதுதொடர்பாக ஹென்றி கஸ்பார் கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் (2021) தற்போது கவுண்டம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக (VAO) வேலை பார்த்து வரும் லோகநாயகி, வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, முன்னர் திருவாரூர் மாவட்டத்தில் விஏஒவாக இருந்த போது, அவரும் அவரது மகன் எழில் பிரபாகரன் இருவரும் சேர்ந்து சுமார் ரூ.2.50 லட்சத்தைப் பெற்றுக் கொண்டனர்.
பணத்தைப் பெற்ற விஏஒ, எங்களுக்கு தெரியாமல் பணியிடமாற்றம் செய்து திடீரென கோவை வந்துவிட்டனர். நாங்கள் கிட்டத்தட்ட 1 வருடமாக விஏஒவைத் தேடி அலைந்து வந்தோம். அதனைத் தொடர்ந்து, அவர்களது செல்போன் நம்பர் மற்றும் பதிவியை வைத்து தேடும் போது கோவைக்கு டிரான்ஸ்பர் ஆகி, கவுண்டம்பாளையத்தில் இருப்பது தெரியவந்தது.
பின்னர், விஏஒவை தேடி அவர்களிடம் கேட்டபோது, இன்னும் ஒரு மாதத்தில் பணம் தருவதாக தெரிவித்தார். ஆனால் தற்போது, பணம் தரவில்லை. நான் விஏஒ அதிகாரத்தில் உள்ளோன், நீ எப்படி என்னிடம் பணத்தை வாங்கிவாய் எனப் பார்க்கலாம் என்று ஆட்களை வைத்து மிரட்டினார். அதன்பேரில், கோவை மாவட்ட காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தேன்.