தூத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இதன் தலைமையாசிரியராக ஜான் கணேஷ் பணியாற்றி வருகிறார். இங்கு பட்டதாரி ஆசிரியர்கள், இடை நிலை ஆசிரியர்கள் என 32 பேர் பணியாற்றுகின்றனர்.
பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) இந்த நிலையில், இங்கு பணிபுரியும் ஆசிரியர்களிடம் வருமான வரி கட்டுவதற்காக பணத்தைப் பெற்று, அதை ஸ்டேட் பேங்க்கில் செலுத்துவது வழக்கம் என்று கூறப்படுகிறது. இதனை தலைமையாசிரியரின் அறிவுறுத்தலின் பேரில், பள்ளியில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் தங்கமாரியப்பன் மூலம் நடைமுறைப்படுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், பள்ளியில் பணியாற்றும் ஒரு ஆசிரியர் வீட்டுக்கடன் வாங்குவதற்காக வங்கிக்குச் சென்றுள்ளார். அங்கு வருமான வரித்துறை ரசீதுகளைக் கொடுத்தபோது, பள்ளியிலிருந்து கொடுத்த வருமான வரி ரசீது போலியானது என்று வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி கோவில்பட்டி கல்வி மாவட்ட அதிகாரி (இடைநிலை) ஜெயப்பிரகாஷ் ராஜனை பள்ளியில் பயிலும் ஆசிரியர்கள் சந்தித்துள்ளனர். அங்கு தலைமையாசிரியர் ஜான் கணேஷ் கையொப்பமிட்டு, வருமான வரிக்கு பணம் செலுத்தியதாக ஆவணத்தை காட்டியுள்ளனர். இதனைப் பெற்றுக் கொண்ட ஆசிரியர்கள் வங்கிக்குச் சென்ற போது அந்த ரசீதும் போலியானது என்பது தெரியவந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ் மீது கோவில்பட்டி மேற்கு போலீசில் புகார் அளித்துள்ளனர். இதற்கிடையே, பள்ளியின் இளநிலை உதவியாளர் தங்கமாரியப்பன் தற்கொலைக்கு முயன்று கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், இப்பிரச்சினை குறித்து தலைமையாசிரியர் ஜான் கணேஷ் கூறுகையில், “நானும் இதில் பாதிக்கப்பட்டு உள்ளேன். ஆசிரியர்களுக்கு சம்பளம் போடுவதற்காக கிளர்க் தங்கமாரியப்பன் கொடுத்த வருமான வரி பில்லில் கையெழுத்து போட்டேன். நானும் தங்க மாரியப்பன் மீது புகார் அளித்துள்ளேன். இப்பிரச்சினை குறித்து ஆசிரியர்களிடம் பேசும் முயற்சி செய்வதற்கு முன்பாகவே அவர்கள் புகார் கொடுத்துவிட்டனர்” என தெரிவித்தார்.
இது குறித்து பள்ளி நிர்வாக தரப்பில் கேட்டபோது, "தனிநபர் முறைகேடு செய்துள்ளார். 17 ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் வருமான வரி கட்டுவதற்கு பணம் கொடுத்துள்ளனர். சில ஆசிரியர்கள் தாங்களாகவே வருமான வரியைக் கட்டியுள்ளனர். அதில், சில ஆசிரியர்களுக்கு ஓர் ஆண்டு, சிலருக்கு 3 ஆண்டுகள் கூட வருமான வரி கட்டவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இந்த மோசடிக்கும், பள்ளி நிர்வாகத்துக்கும் சம்பந்தம் இல்லை. இளநிலை உதவியாளர் தங்கமாரியப்பன் தான் போலி ஆவணங்களை உருவாக்கி மோசடி செய்துள்ளார். அவர் மீது கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம் மற்றும் மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலகம் ஆகியவற்றில் தலைமையாசிரியரும் புகார் செய்துள்ளார்.
மேலும், அலுவலகத்தில் தங்கமாரியப்பன் பயன்படுத்திய மேஜையில், அவர் சொந்த வங்கிக் கணக்கில் உள்ள செக் ஸ்லிப்பில் வருமான வரித்துறைக்கு என்று ரூ.3 லட்சத்து 97 ஆயிரத்து 200 போட்ட செக் கிடைத்துள்ளது” என்றனர். மோசடி செய்ததாக கூறப்படும் தங்கமாரியப்பனிடம் பிரச்சினை குறித்து கேட்க பலமுறை அவருடைய செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட போதும், அவர் போனை எடுக்கவில்லை.
கடந்த நான்கு ஆண்டுகளில் 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டிய பணம் ரூபாய் 1.5 கோடிக்கு மேல் மோசடி நடைபெற்றுள்ளதாக ஆசிரியர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வருமான வரி செலுத்தவில்லை என்றால் அபராதத் தொகையுடன் திரும்பச் செலுத்த வேண்டி வரும் என்பதால் ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர். இதனால் இந்தப் புகாரை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்ற போலீசார் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:சாலைப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ள கம்பியில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு!