Complaint against Congress Councillor கோயம்புத்தூர்:கோயம்புத்தூர், சின்னியம்பாளையம் ஆசிரியர் காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் பாலசுப்பிரமணியன் - லதா தம்பதி. இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வரும் நிலையில், இவர்களுக்குச் சொந்த வீடு இல்லாததால், குடிசை மாற்று வாரியத்தில் வீடு வேண்டி, தெற்கு வட்டாட்சியர் வருவாய் அலுவலகத்தில் தற்காலிகப் பணியாளராக பணிபுரியும் பூசாரி பாளையத்தைச் சேர்ந்த தம்பு என்ற திருமகன் என்பவரை அணுகியுள்ளனர்.
அப்போது, திருமகன் இதற்காக 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் எனவும், அந்தப் பணத்தை கோவை மாநகராட்சி 74வது வார்டு கவுன்சிலர் சங்கரிடம் (காங்கிரஸ்) கொடுத்து, அவர் மூலம் வீடு ஒதுக்கீடு செய்து பெற்றுத் தருகிறேன் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, 2022ஆம் ஆண்டு பூசாரிபாளையத்தில் உள்ள கவுன்சிலர் அலுவலகத்தில் வைத்து, திருமகன் முன்னிலையில் கவுன்சிலர் சங்கரிடம் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, நீண்ட நாட்களாக வீடு ஒதுக்கீடு செய்து தராததால், பாலசுப்பிரமணியன் கவுன்சிலர் சங்கரிடமும், திருமகனிடமும் இது குறித்து கேட்டுள்ளார். அப்பொழுது, கவுன்சிலர் சங்கர், அவரது லெட்டர் பேடில் சட்டமன்ற உறுப்பினராக உள்ள செல்வப்பெருந்தகைக்கு பணிந்துரை கடிதம் எழுதிய நகலையும், செல்வப்பெருந்தகை அமைச்சர் அன்பரசனிடம் வீடு கேட்டு பரிந்துரை செய்த நகல் கடிதத்தையும் வழங்கியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, வீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்து வந்த பாலசுப்பிரமணியன், இன்று வரை வீடு ஒதுக்கீடு செய்து தராததால், தான் கொடுத்த பணத்தைத் திருப்பி கேட்டுள்ளார். அப்பொழுது கவுன்சிலர் சங்கர், பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வருவதுடன், ஆள் வைத்து மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இது குறித்து பாலசுப்பிரமணியன், லதா தம்பதியினர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். தங்களது பணத்தை திரும்பப் பெற்றுத் தருமாறு தம்பதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:வைகை அணையில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு! - Two Students Drowned In Vaigai Dam