புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டத்துக்கு விரோதமாக மணல் அள்ளப்பட்டு வருவதாகவும், இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதோடு, நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என சமூக ஆர்வலர் துரை குணா குற்றம் சாட்டியுள்ளார்.
மணல் கொள்ளை?இது குறித்து சமூக ஆர்வலர் குணா ஈடிவி பாரத்திடம் கூறுகையில், “அறந்தாங்கி அருகே அழியாநிலை கிராமத்தில் வெள்ளாற்று நீர்நிலை புறம்போக்கு பகுதியில், கடந்த ஒரு வாரமாக இரண்டு ஹிட்டாச்சி இயந்திரங்களைக் கொண்டு இரவு பகலாக அனுமதி பெறாமல், சட்டத்துக்குப் புறம்பாக மணலை அள்ளி வருகின்றனர்.
சமூக ஆர்வலர் மற்றும் விஏஓவிடம் செய்தியாளர் பேசிய ஆடியோ (Credits- ETV Bharat Tamil Nadu) அப்படி அள்ளப்பட்ட மணலை கணக்கிட்டுப் பார்த்தால், சுமார் ஆறு கோடி ரூபாய் அளவிற்கு மிகாமல் இருக்கலாம். எங்கள் கணக்கு தவறாக இருந்தால், இன்னும் கூடுதலாகவும் இருக்கலாம். சட்டவிரோதமாக அள்ளப்படும் மணல் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதுடன், அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது" என்றார்.
மேலும், கனிம வளங்களைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே மறைமுகமாக கையூட்டு பெற்றுக் கொண்டு இதற்கு உடந்தையாக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டிய அவர், இதை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாவட்ட கனிமவளத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மணல் கொள்ளையில் ஈடுபடும் மணல் மாஃபியாக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைப்பதாகக் கூறினார்.
இதையும் படிங்க:ஆம்பூரில் பிரபல ஹோட்டல் பிரியாணியில் நெளிந்த புழு.. வாடிக்கையாளர் வாக்குவாதம்!
அரசாங்கத்திற்கு இழப்பு?மேலும் பேசிய அவர், “அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகவும் கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே. மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்தினால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக மணல் மாபியாக்கள் அட்டூழியம் அதிகம் உள்ளது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காகவே எனது சொந்த செலவில் பருந்து பார்வைக் காட்சிகளுடன் மணல் கொள்ளை அடிப்பதை பதிவு செய்து வைத்துள்ளேன்.
அரசாங்கத்திற்கு வருமானம் இல்லாமல் போவது ஒருபுறம் இருந்தாலும், இந்த மணல் கொள்ளையால் நீர் ஆதாரம் வற்றிப் போய் விவசாயிகளும், பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். மேலும், இதுபோன்று மணல் அள்ளும் பள்ளங்களால் சிறுவர்கள் மற்றும் கால்நடைகள் பள்ளத்தில் விழுந்து பாதிக்கப்படும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளதாக" தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் விளக்கம்:இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு கிராம நிர்வாக அலுவலர் தண்டாயுதபாணியிடம் நாம் தொடர்பு கொண்டோம். அப்போது அவர் கூறியதாவது, "சட்ட விரோதமாக மணல் அள்ளும் நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து தாசில்தார் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டுள்ளனர். மேலும் இது தொடர்பான ரிப்போர்ட் ஒன்றை சமர்பிக்க உள்ளதாக தாசில்தார் கூறியுள்ளார். எனவே விரைவில் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.