மதுரை:மதுரை மாவட்டத்தில்மாற்றுத்திறனாளிகளுக்கு 'கதம்ப விழா’ என்னும் கலைத்திறன் போட்டிகள் அடங்கிய நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சி வருகின்ற ஜூன் 29 மற்றும் 30ஆம் தேதிகளில் மதுரை தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் அரங்கில் நடைபெறுகிறது.
விழாவின் நோக்கம்:இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மாற்றுத்திறனாளிகள் மீது காட்ட வேண்டிய பொறுப்புணர்வும், அக்கறையும் போற்றும் வகையிலும், மாற்றுதிறனாளிகள் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குவதுதான் நிகழ்ச்சியின் நோக்கம் என்றனர். சமூக பொது பார்வையில் அவர்களையும் ஒன்றிணைத்து, அவர்களுக்கான மேடையை உருவாக்கி ஊனம் என்பது சாதிக்க தடையில்லை என அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விழாவாக இந்த நிகழ்ச்சி வைக்கப்படுகிறது. இதில் மாற்றுத்திறனாளிகளின் தனித்திறன்களை ஊக்குவித்து சாதனையாளர்கள் ஆக்க வேண்டும்.
ஒருங்கிணைக்கும் கதம்ப விழா:இதில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளம், பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்ச்சி குறித்து நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் ராஜகுமாரி ஜீவகன் கூறுகையில், ”கதம்ப விழா என்ற பெயரில், ’அன்பையும் நல்லிணக்கத்தையும் விதைப்போம், போதை கலாச்சாரத்தை வேரறுப்போம்’. எனும் முழக்கத்தை முன்வைத்து தென்னிந்திய மாநிலங்களில் உள்ள ஆட்டிஸம், அறிவுசார் குறைபாடுடையோர், மூளை முடக்குவாதம், முதுகு தண்டுவட பாதிப்படைந்தோர், செவித்திறன் குறைபாடுடையோர், பார்வை மாற்றுத்திறனாளிகள், கை கால் பாதிக்கப்பட்டோர் மற்றும் சக்கர நாற்காலி பயன்படுத்துவோர் ஆகியோரை உள்ளடக்கிய மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த நிகழ்ச்சி நம்பிக்கை தரகூடிய நிகழ்வாக அமையும்” என்றார்.