தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"திமுக எம்எல்ஏ மகன் வீட்டில் சாதியக் கொடுமை... இளம்பெண்ணுக்கு இழப்பீடு வழங்குக" - ராமதாஸ்! - chennai news

PMK leader Ramadoos: திமுக எம்எல்ஏ மகன் வீட்டில் பட்டியலினப் பெண் கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், பின்னணியில் உள்ள அனைவரையும் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

எம்எல்ஏ மகன் வீட்டில் கொடுமை செய்யப்பட்ட பெண்ணுக்கு இழப்பீட்டு வழங்க வேண்டும்
எம்எல்ஏ மகன் வீட்டில் கொடுமை செய்யப்பட்ட பெண்ணுக்கு இழப்பீட்டு வழங்க வேண்டும்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 20, 2024, 4:17 PM IST

சென்னை: வீட்டு வேலைக்கு சென்ற இளம்பெண்ணை சித்ரவதை செய்ததாக எழுந்த புகாரின்பேரில், வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். குறிப்பாக அப்பெண்ணை கடுமையாக வேலை வாங்கியது மட்டுமல்லாமல் அவரது உடலின் பல்வேறு பகுதிகளில் காயம் ஏற்படும் வகையில் சூடு வைத்து, சித்ரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே இளம்பெண்ணை துன்புறுத்திய திமுக எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகளை கைது செய்ய வேண்டும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில், பாமக நிறுவனர் ராமாதாஸ் வெளியிட்ட அறிக்கையில், "பல்லாவரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி

அவரது மகன் ஆண்டோ மதிவாணன் வீட்டில் வீட்டு வேலை செய்து வந்த, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநருங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த ரேகா என்ற பட்டியல் சமுதாய சிறுமி, கடந்த 8 மாதங்களாக தாங்க முடியாத வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்.

ஆண்டோ மதிவாணனின் மனைவி மெர்லின் என்பவர், ரேகாவின் உடலில் சூடு வைத்து கொடுமைப்படுத்தியதாகவும், அதனால் ரேகாவின் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்திருக்கிறது. சிறுமி என்று கூட பாராமல் ரேகாவுக்கு இழைக்கப்பட்ட கொடுமை கண்டிக்கத்தக்கது, மன்னிக்க முடியாதது ஆகும்.

ஒரு கட்டத்தில் மாணவிக்கு கடுமையாக காயங்கள் ஏற்பட்ட நிலையில், அதற்காக அவருக்கு மருத்துவ சிகிச்சைக் கூட அளிக்காத திமுக சட்டப்பேரவை உறுப்பினரின் குடும்பம், அவரை உளுந்தூர்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கச் செய்து விட்டு தப்பி விட்டது. மாணவி ரேகாவை மனிதராகக் கூட மதிக்காமல் கொடுமைகளுக்கு உள்ளாக்கிய ஆண்டோ மதிவாணன் மற்றும் மெர்லின் ஆகியோர் மீது நீண்ட இழுபறிக்குப் பிறகு தான் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால், அதன் மீது தொடர் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. மாறாக, வழக்கை நீர்த்துப் போகச் செய்ய அனைத்து திரைமறைவு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. அந்த வழக்கில் குற்றவாளிகள் தப்புவதற்கு தமிழக அரசும், காவல்துறையும் அனுமதிக்கக்கூடாது.

மாணவி ரேகாவை கொடுமைப்படுத்தியவர்கள் மட்டுமின்றி, அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக திகழ்பவர்கள் மீதும் வழக்கு நீட்டிக்கப்பட வேண்டும். அனைவரிடமும் விசாரணை நடத்தி, முகாந்திரம் இருக்கும்பட்சத்தில் கைது செய்யப்பட வேண்டும். வழக்கு விசாரணையை விரைவுபடுத்தி குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவி ரேகாவுக்கு தமிழக அரசின் சார்பில் 10 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக திமுக எம்.எல்.ஏ மகன், மருமகள் மீது வழக்குப்பதிவு!

ABOUT THE AUTHOR

...view details