சென்னை:செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தின் கூட்ட அரங்கில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக அரசு அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
அமைச்சர் தா.மோ.அன்பரசன் செய்தியாளர் சந்திப்பு (CREDIT -ETVBharat TamilNadu) இந்த கூட்டத்தில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர்கள், தாம்பரம் போலீஸ் கமிஷ்னர் அமல்ராஜ், கிளாம்பாக்கம் பேருந்து நிலைய செயல் அலுவலர் பார்த்திபன் உள்ளிட்டோர் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், பல்லாவரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை விடுமுறை நாட்களிலும் பண்டிகை நாட்களிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதை சரி செய்ய வேண்டுமென அனைத்து துறை அதிகாரிகள் இணைந்து, ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக தற்பொழுது குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு அறிக்கை தர உள்ளார்கள். அந்த அறிக்கையை வைத்து அதற்கு ஏற்றவாறு பணிகளை செய்ய தயாராக உள்ளோம். இருக்கின்ற பிரச்சினைகளை சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 10 நாட்களுக்குள் அறிக்கை வாங்கப்பட்டு, அதற்கேற்றார் போல் நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகள் சற்று தாமதம் ஆகியது. விரைவில் பணி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். வண்டலூர் முதல் காட்டாங்கொளத்தூர் வரை மேம்பாலம் அமைக்கும் பணி தொடர்பான அறிவிப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் வெளியாகும்.
அதேபோன்று சாலை விரிவாக்கம் பணியின்போது அகற்றப்பட்ட, பேருந்து நிறுத்தங்கள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னையில் மழைநீர் வடிகால் பணி 90 சதவீதம் நிறைவு - ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல்! - Chennai Rainwater Drainage