சென்னை :தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் பொதுச் செயலர் சுரேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 2000ம் ஆண்டிற்கு பின் முறையான பணியமர்த்துதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமலும், இட ஒதுக்கீட்டினை பின்பற்றாமல் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களுக்கும் கூடுதலாக ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்களை நியமனம் செய்ததால், அவர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத நிதி சிக்கலில் இருந்தது.
எனவே, 2013ம் ஆண்டு அதிமுக அரசு சட்டமன்றத்தில் இதற்கென ஒரு சட்டத்தை நிறைவேற்றி, இந்த பல்கலைக் கழகத்தை தமிழக அரசு முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக தெரிவித்து 2016ம் ஆண்டு முதல் மூன்று ஆண்டு மாற்றுப்பணி அடிப்படையில் அரசு கல்லூரிகளில் நியமிக்கப்பட்டனர். இவ்வாறு மாற்றுப்பணியில் அரசு கல்லூரிகளில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. மாற்றுப்பணி மீண்டும், மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது.
சமூக நீதி அடிப்படையில், முறையான இட ஒதுக்கீட்டினை பின்பற்றி, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக கிடைக்க வேண்டிய பணி நியமனம் இதனால் தடுக்கப்படுகிறது. அரசு கல்லூரிகளில் மாற்றுப்பணியில் பணியமர்த்தப்பட்ட அண்ணாமலை பல்கலைக்கழக உபரி ஆசிரியர்களை அரசு கல்லூரிகளில் பணி நிரந்தரப்படுத்த கோருவதே சமூக நீதிக்கு எதிரானதாகும். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் பணி ஓய்வு பெறும் போது, உபரி ஆசிரியர்களை திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க :“சீமானுக்கு தமிழ் மேல் அவமரியாதை” - அன்பில் மகேஷ் பதிலடி!