திருவாரூர்:திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கோட்டூர் பகுதியைச் சேர்ந்த ஓர் தம்பதியின் மகள் வசந்த பிரியா வயது 24. இவர் மன்னார்குடியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இளம்பெண்ணின் தந்தையுடைய அக்கா மகனான மகாதேவன் (26 ) என்பவரும், வசந்த பிரியாவும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இருவரின் காதலுக்கும் இருவீட்டு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மகாதேவனின் நடவடிக்கைகள் பிடிக்காத காரணத்தினால் இளம்பெண் அவரை திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனையடுத்து இருவீட்டாரும் சேர்ந்து ஒருமித்த முடிவாக திருமணம் வேண்டாம் என்று முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் பெண்ணின் பெற்றோர்கள் தங்களது இன்னொரு மகளின் வீட்டிற்கு இன்று சென்றதாக தெரிகிறது. இதனால் கல்லூரிக்கு சென்றுவிட்டு திரும்பிய இளம்பெண் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்த மகாதேவன், பெண் வீட்டிற்கு வருகை புரிந்து தன்னை மீண்டும் காதலிக்க வேண்டுமென வற்புறுத்தியுள்ளார். இதற்கு அப்பெண் மறுத்தாகவும், இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.