திருநெல்வேலி:நெல்லையில் கல்லூரிக்குச் சென்ற மாணவியின் இருசக்கர வாகனத்தின் முன்பு, சாலையில் சுற்றித் திரியும் மாடு குறுக்கே வந்ததில் ஏற்பட்ட விபத்தில், படுகாயமடைந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், சாலையில் திரியும் மாடுகளை மீட்டு, உரிமையாளர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை மாநகராட்சி 55வது வார்டுக்கு உட்பட்ட தியாகராஜர் பகுதியில் சாலையில் திரியும் மாடுகள், வாகனங்கள் மீது எதிர்பாராத நேரத்தில் மோதி அடிக்கடி விபத்து ஏற்படுவதாக, அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்துள்ளதாக கூறுகின்றனர்.
ஸ்கூட்டி முன்பு பாய்ந்த மாடு சிசிடிவி காட்சி (Credit - ETV Bharat Tamil Nadu) இந்த நிலையில், நேற்று (அக்.23) காலை 9 மணி அளவில் தியாகராஜ நகர் அடுத்த திருமால் நகரைச் சேர்ந்த மாணவி சுவாதிகா, கல்லூரிக்கு செல்வதற்காக ஸ்கூட்டியில் சென்றுள்ளார். தியாகராஜ நகர் 2வது நடுத்தெருவின் வழியாக வந்து கொண்டிருந்தபோது, சாலையில் திரிந்து கொண்டிருந்த மாடுகளில் ஒன்று, எதிர்பாராத விதமாக மாணவி சென்ற ஸ்கூட்டிக்கு குறுக்கே வந்து மோதியுள்ளது.
இதையும் படிங்க: கவரைப்பேட்டை ரயில் விபத்து; ஊழியர்களிடம் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை!
அதனால் மாணவியின் ஸ்கூட்டி பறந்து சென்று விழுந்த விபத்தில், மாணவி சுவாதிகாவும் படுகாயத்துடன் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டுள்ளார். அதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர், விபத்தில் படுகாயம் அடைந்த மாணவியை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் இதுபோல பலமுறை விபத்து சம்பவங்கள் நடப்பதாக அப்பகுதியின் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, மாநகராட்சி நிர்வாகம் சாலையில் திரியும் மாடுகளை மீட்டு, உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கால்நடைகளால் ஏற்படும் விபத்துகளையும், உயிரிழப்புகளையும் தடுக்க புதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தியாகராஜர் பகுதி மக்கள், மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே, கல்லூரி சென்ற மாணவி பைக் மீது மாடு மோதி, மாணவி வீசப்பட்ட சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்