தருமபுரி: 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கடத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட புது ரெட்டியூர் பகுதியில் புதியதாக ரூ.14 லட்சத்தில் பூங்கா அமைக்கும் பணிக்கு டெண்டர் விடப்பட்டு பணி நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த பணிகளைப் பார்வையிடச் சென்ற தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, அங்கு பூங்கா அமைக்க எந்த விதமான பணியும் தொடங்காததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து, "டெண்டர் விடப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகியும் ஏன் பணிகள் தொடங்கவில்லை? நாளைக்குள் பூங்கா அமைக்கும் பணியை தொடங்கவில்லை என்றால் நீங்கள் பணி இடைநீக்கம் செய்யப்படுவீர்கள்" என்று பேரூராட்சி செயல் அலுவலருக்கு எச்சரிக்கை விடுத்தார் மாவட்ட ஆட்சியர் சாந்தி.
இதன் தொடர்ச்சியாக, பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பெ.மல்லாபுரம் பேரூராட்சி ஒன்றாவது வார்டு பகுதியில் 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பூங்காவை ஆய்வு செய்தார். அப்போது அந்த பூங்காவின் அருகில் செயல்பட்டு வரும் அரவை ஆலையில் இருந்து சத்தம் அதிகமாக வந்துள்ளது.
இதனை அடுத்து, சத்தம் அதிகமாக இருக்கும் இடத்தில் ஏன் பூங்காவை அமைத்தீர்கள்? எப்படி குழந்தைகள் விளையாடுவார்கள்? என்று கேள்வி எழுப்பிய மாவட்ட ஆட்சியர் சாந்தி, பூங்கா பராமரிப்பு இல்லாமல் அசுத்தமாக இருப்பதை உடனடியாக சுத்தம் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.