தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்த முறை பருவமழைக்கு தாங்குமா திருநெல்வேலி! மாவட்ட ஆட்சியர் சொல்வதென்ன? - TIRUNELVELI

வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டு பணிகள் குறித்து நெல்லை ஆட்சியர் கார்த்திக்கேயன், ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு பிரத்யேக தகவல் அளித்துள்ளார். அதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 17, 2024, 11:06 PM IST

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு மழை வெள்ளம் ஏற்படாமல் இருக்க வழக்கம் போல் கால்வாய் தூர் வாருவது கரைகளை பலப்படுத்துவது போன்ற பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாதுரியமாக மக்களை பாதுகாக்க என்னென்ன செய்யலாம் என்பது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் ஒரு சிறப்பு குழுவை அமைத்து ஆலோசனை மேற்கொண்டார்.

அதன்படி மலைப்பகுதியில் பதிவாகும் மழையின் அளவை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ளவும், தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறந்து விடும் போது வெள்ள நீரின் அளவை உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும் நவீன இயந்திரங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.

நெல்லை ஆட்சியர் கார்த்திக்கேயன் பேட்டி (Credit - ETV Bharat Tamil Nadu)

எச்சரிக்கை கருவி:முதல் கட்டமாக திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் சுமார் 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆலடியூரில் தொடங்கி முறப்பநாடு வரை தாமிரபரணி ஆற்று பாலங்களில் தண்ணீரின் அளவு மற்றும் வேகத்தை கணிக்கும் நவீன கருவி பொருத்தப்பட்டுள்ளது. அதி நவீன தொழில் நுட்பவசதியுடன கூடிய இந்த கண்காணிப்பு கருவிகளின் மூலம் ஆற்றில் வரும் நீரின் அளவு வெள்ளத்தின் வேகம் நீரோட்டம் ஆகியவற்றை கணிக்க முடியும்.

இந்த கருவிகளில் 360 டிகிரி கோணத்தில் படம்பிடிக்கும் சென்சார் கேமரா மற்றும் சென்சார் போர்டுகள் இடம் பெற்றுள்ளன. இந்த கருவிகளிலிருந்து பெறப்படக்கூடிய தகவல்கள் அனைத்தும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை மற்றும் மாநகராட்சி அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைக்கப்படும்.

அங்கிருந்து தரவுகளைப் பெற்று தண்ணீர் செல்லும் பாதைகளை கணக்கிட்டு வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுக்க முடியும் என்பது அதிகாரிகளின் நம்பிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க:மழை வெள்ளத்தில் சிக்கிய பைக், கார்களை பாதுகாப்பது எப்படி? - மெக்கானிக் தரும் டிப்ஸ்!

புதிய சிஸ்டம் பயன் கொடுக்கும்:இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனை ஈடிவி பாரத் சார்பில் பிரத்யேகமாக தொடர்பு கொண்ட போது அவர் நம்மிடம் கூறுகையில்,"தாமிரபரணி ஆற்றிலிருந்து தான் வெள்ளம் ஏற்படுகிறது.

அதன் கொள்ளளவை அதிகரிக்க வேண்டும் என்பது தற்போதைக்கு சாத்தியம் இல்லை என்பதால் எச்சரிக்கை கருவிகள் பொருத்தும் பணியில் தீவிரம் காட்டி வருகிறோம். அதன்படி தாமிரபரணி ஆற்று பாலங்களில் வெள்ளத் தடுப்பு கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.

இதுதவிர மலைப் பகுதிகளில் தானியங்கி மழைப் பதிவு இயந்திரம் பொருத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதன் மூலம் மழைக் காலங்களில் மாஞ்சோலை உள்பட தொலைத்தொடர்பு இல்லாத மலைப்பகுதிகளில் பெய்யும் மழையின் அளவு உடனுக்குடன் பெற முடியும்.

இதற்கு முன்பு மழை அளவு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் முன்னெச்சரிக்கை பணியில் தாமதம் ஏற்பட்டது. எனவே இந்த முறை மழை அளவை உடனுக்குடன் பெறுவதன் மூலம் வெள்ள தடுப்பு பணியில் வேகமாக செயல்பட முடியும். இது தவிர கிராமங்களில் புதிதாக 300 குளங்களை 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் ஏற்படுத்தி உள்ளோம்.

இதற்கு முன்பு வெள்ளநீர் கால்வாயுக்கும் அதிசய கிணற்றிற்கும் இணைப்பு கிடையாது. தற்போது ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு கால்வாய் வெட்டியதன் மூலம் வெள்ள நீர் கால்வாயிலிருந்து அதிசய கிணற்றுக்கு தண்ணீர் செல்லும் இதன் மூலம் வெள்ளம் தடுக்க முடியும்.

மாநகர பகுதியைப் பொருத்தவரை சுமார் 18 கிலோமீட்டர் தூரத்திற்கு சீமை கருவேல மரங்கள் எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் நமது மாவட்டத்திற்கு வந்துள்ளனர். அவர்களை கொண்டு வெள்ளம் அதிகம் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் கூட்டுப் பயிற்சி நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

டவுண் போன்ற பகுதிகளில் வீடுகள் புறம்போக்கு கால்வாயில் கட்டிருப்பதால் பாதிப்பு ஏற்படுகிறது. விசாரணைக்கு பின் இந்த வீடுகளை காலி செய்ய ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளோம். இனி வரும் காலங்களில் அந்த வீடுகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும். இந்த ஆண்டு வெள்ள தடுப்புக்காக அரசு 4 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கி உள்ளது முக்கியமாக இந்த எச்சரிக்கை கருவி சிஸ்டம் வெள்ள தடுப்பு பணியில் முக்கிய பங்கு வைக்கும்" என நம்புகிறோம் என்று தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credit - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details