தருமபுரி: நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதில் வாக்குப்பதிவு செய்வதற்கான பணிகளைத் தேர்தல் ஆணையம் மும்மரமாகச் செய்து வருகிறது.
85 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் என வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்கு செலுத்த முடியாதவர்களுக்கு மாற்று ஏற்பாடாக நேரடியாக வீட்டிற்கே சென்று தபால் மூலம் வாக்கு செலுத்தும் முறையை இந்த தேர்தலிலிருந்து இந்தியத் தேர்தல் ஆணையம் நடைமுறைக்குக் கொண்டு வந்து உள்ளது. அதற்கான பணிகள் தேர்தல் அறிவித்தவுடன் வாக்குச்சாவடி அலுவலர்கள் மூலம் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 04) தமிழகம் முழுவதும் வயதானவர்களும், மாற்றுத்திறனாளிகளும் தபால் வாக்கு செலுத்தும் பணிகள் தொடங்கியது. அதன் ஒரு பகுதியாகத் தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் அரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கொளகம்பட்டி வாக்குச்சாவடியில் 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் வாக்கு செலுத்தும் பணிகள் இன்று தொடங்கப்பட்டது.