தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"கோவை வந்தா வீட்டுக்கு வரேன்" தமிழ் வைத்தியருக்கு ரத்தன் டாடா கொடுத்த வாக்குறுதி!

இந்தியத் தொழில்துறையின் முகமாகத் திகழ்ந்த ரத்தன் டாடாவின் முதுகுவலிக்கு சிகிச்சை அளித்ததாக கோவை வைத்தியர் இலக்குமணன், ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியுள்ளார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 11, 2024, 4:31 PM IST

மறைந்த ரத்தன் டாடாவுடன் கோவை வைத்தியா் இலக்குமணன் மற்றும் அவரது மனைவி மனோன்மணி
மறைந்த ரத்தன் டாடாவுடன் கோவை வைத்தியா் இலக்குமணன் மற்றும் அவரது மனைவி மனோன்மணி (Credit - ETVBharat TamilNadu)

கோயம்புத்தூர்:'ரத்தன் டாடா எங்களை அவரது குடும்பத்தில் ஒருவராக நடத்தினார் எனவும் அவரது குணத்தையும், எளிமையையும் கண்டு வியந்தேன்' என மறைந்த ரத்தன் டாடாவுக்கு சிகிச்சை அளித்த நாட்களின் நினைவுகளை அசை போடுகிறார் கோவை வைத்தியர் இலக்குமணன். கோவை மருதமலை அடிவாரம் ஐ.ஓ.பி காலனியில் போகர் வலி நீக்கு நிலையம் என்ற பெயரில் மூன்று தலை முறைகளாக வலி நீக்கு வைத்திய சாலை நடத்தி வருபவர் இலக்குமணன்.

இவர் இந்தியாவின் மிகப்பெரிய ஜாம்பவனாக திகழ்ந்த தொழிலதிபர் ரத்தன் டாட்டாவிற்கு மூட்டு மற்றும் முதுகு வலிக்கு சிகிச்சை அளித்ததாக கூறியுள்ளார். ரத்தன் டாடா புதன்கிழமை இரவு மறைந்த நிலையில், அவரின் எளிமையான குணங்களை குறிப்பிட்டு பலர் சமூக வலைதளத்தில் எழுதி வருகின்றனர்.

செல்போனில் அழைப்பு:அதன்படி ரத்தன் டாடாவிற்கு சிகிச்சை அளித்தது குறித்தும் அவரின் எளிமையான குணம் குறித்து வைத்தியர் இலக்குமணன் ஈடிவி பாரத் ஊடகத்திடம் பகிர்ந்துள்ளார். "கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் டாடா குழும இயக்குநர்களில் ஒருவரும் ரத்தன் டாடாவுக்கு நெருக்கமானவரும் கேரள மாநிலம், தலச்சேரியை பூர்விகமாகக்கொண்ட கிருஷ்ணகுமார் திடீரென ஒருநாள் என்னைத் தொடர்பு கொண்டார்.

முதுகு வலி, மற்றும் முழங்கால் வலியால் அவதிப்படும் ரத்தன் டாடாவுக்கு வர்ம சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அவர் என்னிடம் கோரிக்கை வைத்தார். அதை ஏற்று எனது மனைவி மனோன்மணியுடன் ரத்தன் டாடா இல்லத்திற்கு சென்றோம்" என பழைய நினைவுகளை கூறினார் வைத்தியர் இலக்குமணன்.

ரத்தன் டாடாவிற்கு மூலிகை எண்ணெய்:அதனை தொடர்ந்து ரத்தன் டாடாவிற்கு அளித்த சிகிச்சை குறித்து பகிர்ந்தவர், "2019 அக்டோபர் 30ம் தேதியில் இருந்து 4 நாள்கள் அங்கேயே தங்கியிருந்து அவரது முதுகு வலி பிரச்னைக்கு வர்ம சிகிச்சை அளித்தோம். அதில் அவரது பிரச்சனை பெருமளவு குறைந்தது. பின்னர், எங்களின் பிரத்யேக மூலிகை எண்ணெயையும் வழங்கிவிட்டு வந்தோம்.

அதன் பிறகு சில வாரங்கள் கழித்து மீண்டும் இரண்டாவது முறையாக எங்களை வரவழைத்தார். அப்போது 3 நாட்கள் தங்கி மீண்டும் சிகிச்சை அளித்தோம். சிகிச்சைக்கு முன்பு குனிந்தபடியே நடமாடி வந்த அவர், எங்களது சிகிச்சைக்குப் பிறகு முதுகை நிமிர்த்தி நடந்தார். வலியால் அவதிப்பட்ட அவர் அதில் இருந்து மீண்டார். அது அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது" என்றார்.

மறைந்த ரத்தன் டாடாவுடன் கோவை வைத்தியா் இலக்குமணன் மற்றும் அவரது மனைவி மனோன்மணி (Credit - ETVBharat TamilNadu)

பின்னர், "அவரது முதன்மை செயல் அதிகாரி மூலம் எங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டுமோ அதை வாங்கி கொள்ளுமாறு அறிவுறுத்தினார். ஆனால் நாங்கள் பணம் ஏதும் வாங்கவில்லை, காரணம் நாட்டில் பல லட்சம் குடும்பங்களை வாழ வைக்கும் மிகச் சிறந்த தொழிலதிபரான அவர் நன்றாக இருக்க வேண்டும் என்றே
எண்ணினோம், பணம் எங்களுக்கு பெரிதாக தெரியவில்லை.

எளிமையை கண்டு வியந்தேன்: சிகிச்சை அளிக்க நாங்கள் அவரது இல்லத்தில் தங்கியிருந்த நாட்களில் எங்களை தனது குடும்பத்தில் ஒருவராகத் தான் எங்களையும் நடத்தினார். கோவைக்கு வந்தால் நிச்சயம் உங்கள் வீட்டுக்கு வருவதாக கூறினார். நான் சிகிச்சை அளித்த நேரங்களில் அவரது அடக்க குணத்தையும், எளிமையையும் கண்டு வியந்தேன்.

ரத்தன் டாடாவுக்கு நாங்கள் சிகிச்சை அளித்தோம் என்பதை நாங்கள் இதுவரை வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வில்லை. அதற்குக் காரணம் அவரிடம் கற்றுக் கொண்ட எளிமையும், அடக்கமும் தான்.
இந்நிலையில், அவரது மறைவு செய்தியை புதன்கிழமை இரவு அறிந்ததும், மிகவும் கவலை அடைந்தோம் அவரை இறுதியாக பார்க்க வேண்டும் என எண்ணி இருந்த சமயத்தில் வியாழக்கிழமை காலை மும்பைக்குச் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வந்தோம்.

இறுதி சந்திப்பு:நாங்கள் அவரின் இறுதி சடங்கு நிகழ்ச்சிக்கு செல்வோம் என நினைக்கவில்லை, திடிரென எனது மகன் மும்பைக்கு விமான டிக்கெட் புக் செய்தார், எங்களுக்கு ஏர் இந்தியாவில் தான் டிக்கெட் கிடைத்தது. போய் வர ஏர் இந்தியா விமானம் தான் கிடைத்தது. எங்களை அழைத்து செல்ல அவரே வந்ததாக கருதுகிறோம்" என கண் கலங்கியபடி கூறினார் இலக்குமணன்.

இதையும் படிங்க:டாடாவையே கையில் வைத்திருந்த தமிழ்நாடு: டைட்டன் நிறுவனத்தின் கதை!

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details