கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் மதுக்கரை அருகே அறிவொளி நகர் உள்ளது. இந்த பகுதியில் ரசீது என்பவருக்குச் சொந்தமான நகைப்பெட்டி தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று பிற்பகல் நகைப்பெட்டி தயாரிக்கும் ஆலையின் குடோனில் தீடீர் தீ விபத்து ஏற்பட்டது.
இதனையடுத்து, குடோன் மற்றும் ஆலையில் இருந்த தொழிலாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். மேலும், தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், ரயில் நிலையம், பீளமேடு, சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 4 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு, தீயை அணைத்தனர்.