கோயம்புத்தூர்:கோவை பீளமேடு சிட்ரா பகுதியில் அமைந்துள்ள கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாட்டு விமான சேவைகளும், சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களுக்கு உள்நாட்டு விமான சேவைகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
நாள் ஒன்றுக்கு சுமார் 50க்கும் மேற்பட்ட விமானங்கள் வந்து செல்கின்றன. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். அதிக அளவில் பயணிகள் வந்து செல்வதால் மத்திய தொழில் பாதுகாப்புப் படை போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக தங்கம் மற்றும் பல்வேறு பொருட்கள் கடத்தி வருவதைக் கண்காணிக்கவும் சிறப்பு நுன்னறிவு பிரிவினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கோவை விமான நிலைய அதிகாரிகளுக்கு இன்று (ஜூன் 24) இஸ்லாமிய அமைப்பு பெயரில் இ-மெயில் ஒன்று வந்துள்ளது.
அதில், விமான நிலையத்தில் உள்ள கழிவறையில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் அது வெடிக்கப் போவதாகும் தெரிவித்திருந்தனர். மேலும், இஸ்லாமிய அமைப்பு பெயரில் இந்த இ-மெயில் வந்திருந்ததால் உடனடியாக வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து, கோவை மாநகர காவல் துறை வெடிகுண்டு கண்டறியும் போலீசார், கோவை விமான நிலையம் முழுவதும் தீவிர சோதனை ஈடுபட்டனர். மோப்ப நாய்கள் கொண்டு விமான நிலையம் முழுவதும் சோதனை மேற்கொண்டதில் வெடிகுண்டு ஏதும் கைப்பற்றப்படவில்லை. எனினும், பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், "கடந்த வாரம் இதே போன்று விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அது வெறும் வதந்தி என தெரியவந்தது. அதேபோல, இன்று மீண்டும் இஸ்லாமிய அமைப்பின் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மோப்பநாய் உதவியுடன் விமான நிலையத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சோதனை மேற்கொண்டதில், இது மீண்டும் போலியாக விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் என தெரிய வந்தது. இருந்தபோதிலும், பாதுகாப்புக்காக அதிக அளவில் போலீசார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தனர்.
கடந்த இரண்டு வாரங்களில் இரண்டு முறை கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள நிலையில், கோவை மாநகர் முழுவதும் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஜெஸ்ட் மிஸ்.. கோவையில் வாக்கிங் சென்ற தம்பதியை துரத்திய யானை - வீடியோ வைரல்!