கோயம்புத்தூர்:கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மனோகரன், சுமதி தம்பதியினர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ள நிலையில், முதல் மகள் மருத்துவம் முடித்துவிட்டு, தனது கணவருடன் கனடாவில் வசித்து வருகிறார். தற்போது, மனோகரன் - சுமதி தம்பதியினர் தனது இளைய மகளுடன் விளாங்குறிச்சி பகுதியில் வசித்து வருகின்றனர். மேலும், இவர்கள் கோவை, சவுரிபாளையம் மற்றும் சேரன்மாநகர் பகுதியில் உணவகம் நடத்தி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மனோகரனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அதற்காக சிகிச்சை எடுத்து வருவதாகவும், தற்போது இவருக்கு கடன் அதிகமாக உள்ளதாகவும், அதனால் தம்பதியினர் இருவரும் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலையில் (வியாழக்கிழமை) வழக்கம்போல் உணவகத்திற்குச் சென்று மதியம் வீடு திரும்பிய மனோகரன், மாலையில் சேலம் செல்வதாகக் கூறிவிட்டு மனைவி சுமதியுடன் காரில் சென்றுள்ளார்.
அதையடுத்து, கருமத்தம்பட்டி கணியூர் சுங்கச்சாவடி அருகே வந்தபோது காரை இணைப்புச் சாலையில் நிறுத்திவிட்டு, தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். அதில், சிறிது நேரத்தில் சுமதி உயிரிழந்த நிலையில், மனோகரன் உயிருக்குப் போராடி வந்துள்ளார். அதனை அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் பார்த்துவிட்டு, சுங்கச்சாவடியில் இருந்த மருத்துவ பணியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
பின்னர், அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மருத்துவக் குழுவினர், இருவரையும் பரிசோதனை செய்துள்ளனர். அதில், சுமதி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்த மருத்துவர்கள், உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த மனோகரனை மீட்டு, நீலாம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.