கோவை:கோவை கொடிசியா மைதானத்தில் திமுக சார்பில் சனிக்கிழமை மாலை முப்பெரும் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை,சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்,மனித நேயமக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் , கொ.ம.தே.க பொதுச் செயலாளர் ஈஸ்வரன், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமூன் அன்சாரி, தமிழக வாழ்வுரிமை கழக தலைவர் வேல்முருகன், மக்கள் நீதி மையம் கட்சி துணைத் தலைவர் மௌரியா உட்பட திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் பங்கேற்றனர்.
தேர்தலில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணபதி ராஜ்குமார், துரை வைகோ, செ.வெங்கடேசன், ஜோதிமணி, தமிழச்சி தங்கபாண்டியன், விஜய்வசந்த், செல்வகணபதி, கலாநிதி வீராசாமி ,
தங்கதமிழ்செல்வன், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் மேடையில் அமர வைக்கப்பட்டு இருந்தனர்.
ஸ்டாலின் நிகழ்த்திய சாதனை:பொதுக்கூட்டத்தில் பேசிய மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமூன் அன்சாரி, "எந்த கோவை மண்ணில் திராவிட இயக்க அரசியலுக்கு சவால் விடுத்தார்களோ அதே கோவை மண்ணில் இவ்விழா நடத்தப்படுகின்றது என தெரிவித்தார். 2004 -இல் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் கலைஞர் வெற்றி பெற்றார். 20 ஆண்டுகள் கழித்து அதே சாதனையை திமுக தலைவர் ஸ்டாலின் செய்து இருக்கின்றார். 40 இடங்களில் வெற்றி பெற்று இருப்பதன் மூலம் வேகத்தடையை ஏற்படுத்தி இருக்கின்றார். இஸ்லாமியர்களுக்கு அச்ச உணர்வைப் போக்கி இருக்கின்றார் முதல்வர் ஸ்டாலின்" என தமிமூன் அன்சாரி தெரிவித்தார்.
எதிரிகளுக்கு அச்சம்:தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேசும் போது, "கலைஞர் கருணாநிதி இந்தியா முழுவதும் திரும்பி பார்க்கும் ஆளுமையாக இருந்தவர் எனவும், அவர் காலத்தில் செய்ய முடியாததை அவர் தனையன் தளபதி ஸ்டாலின் செய்து இருக்கின்றார், இத்தனை கூட்டணி கட்சிகளை தொடர்ந்து அரவணைத்து சென்று கொண்டு இருக்கின்றார். கட்டுப்கோப்பான கூட்டணி தேர்தலை சந்திக்கும் போது எதிரிகளை அச்சப்படவைக்கின்றது" என தெரிவித்தார்.
2026 -லும் அபார வெற்றி: கொ.ம.தே.க பொதுசெயலாளர் ஈஸ்வரன் பேசும்போது,"கொங்கு மண்டலத்தில் இந்த கூட்டத்தை நடத்த அனுமதி அளித்தற்கு நன்றி எனவும், 40 தொகுதியிலும் வெற்றி பெற்று வரலாறு படைத்து இருக்கின்றோம், 40 தொகுதியிலும் வெற்றி பெற்று இருப்பதற்கு முதல்வரின் திறமை காரணம்" என தெரிவித்தார். இந்த கூட்டணியை தொடர்த்து பிரியாமல் நடத்த திறமை வேண்டும், இந்த வெற்றிக்கு முதல் காரணம் முதல்வர் ஸ்டாலின் என தெரிவித்த அவர், 2026 சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்; கொங்கு மண்டலத்தில் அனைத்து மக்களும் இருக்கின்றனர். இந்த ஊருக்கு ஒரு சிறப்பு அந்தஸ்த்தை கொடுத்து, சிறப்பு நிதியை கொடுக்க வேண்டும்" எனவும் ஈஸ்வரன் வலியுறுத்தினார்.
கலைஞர்தான் காரணம்: மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பேசும்போது, "தலைவர் கலைஞர் என்ன கொள்கைக்காக, கோட்பாடுகளாக உழைத்தாரோ அந்த கோட்பாட்டிலே ஒரு இமாலய வெற்றியை இன்றைய திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் ஸ்டாலின் பெற்றுள்ளார். கலைஞர் அடித்தட்டு மக்களுடைய உரிமைகளுக்காக போராடினார்; வென்றார் என்பது தான் வரலாறாக இருக்கின்றது.
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் என்ற துறையே தமிழகத்தில் அவரால் ஏற்படுத்தப்பட்டது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நீண்டகாலமாக வைக்கப்பட்ட கோரிக்கையை 2007 ம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி நிறைவேற்றி முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புள்ள 3.5 சதவீதம் விழுக்காடு வழங்கிய பெருமையும் கலைஞரை சாரும்,அருந்ததியர் மக்கள், பட்டியல் இனத்திற்கான தனி இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார்கள்.அந்த கோரிக்கையை நிறைவேற்றியதும் கலைஞர் தான்" என பெருமிதம் தெரிவித்தார்.
இதையும் படிங்க:"பிரதமர் 8 முறை வந்தும் முடியாததை ராகுல் ஒரே ஸ்வீட் பாக்சில் முடித்துவிட்டார்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!