கோயம்புத்தூர்: 2024 நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்தை அடுத்து, நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.
அப்போது பேசிய மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கிராந்தி குமார், "கோவை மாவட்டத்தில் 30 லட்சத்து 81 ஆயிரத்து 594 வாக்காளர்கள் இருக்கின்றனர். வேட்பு மனு தாக்கல் முடியும் 10 நாட்களுக்கு முன்பு வரை (மார்ச் 17) வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்.
மேலும், 85 வயதுக்கு மேல் இருப்பவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியவர்களின் வீடுகளுக்குச் சென்று வாக்குகளைப் பெற திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில், 31 ஆயிரத்து 835 பேர் 85 வயதுக்கு மேற்பட்டவர்களும், 14 ஆயிரத்து 285 மாற்றுத் திறனாளிகள் இருக்கின்றனர். மேலும், தேர்தல் குறித்த புகார்கள் தெரிவிக்க தனி எண் வழங்கப்பட்டுள்ளது.
பொது இடங்களில் இருக்கும் அரசியல் கட்சி சின்னங்கள், விளம்பரங்கள் ஆகியவற்றை அழிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, 50 ஆயிரத்துக்கு மேல் பணம் வைத்து இருப்பவர்கள் அதற்கான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். உரிய ஆவணங்கள் இல்லை என்றால் பறிமுதல் செய்யப்படும். அப்படி பணம் பறிமுதல் செய்யப்பட்டால் அச்சப்பட தேவையில்லை, உரிய ஆவணங்களைக் காட்டி பணத்தை பெற்றுக் கொள்ளலாம்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "10 லட்சத்துக்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டால் வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவித்து அவர்களிடம் ஒப்படைக்கப்படும். பணம் எப்படி வந்தது என்பதற்கான ஆவணங்கள் இருக்க வேண்டும். வீடியோ டீம் மூலம் அனைத்து பகுதிகளிலும் வீடியோ எடுக்கப்படும்.