சவுக்கு சங்கர் வழக்கறிஞர் பேட்டி (Video Credit to ETV Bharat Tamil Nadu) கோயம்புத்தூர்: சவுக்கு சங்கரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என கோவை சைபர் கிரைம் போலீசர் மனு அளித்திருந்த நிலையில், ஒரு நாள் மட்டும் போலிஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, பெண் காவலர்கள் மற்றும் காவல் உயர் அதிகாரிகளை அவதூறாகப் பேசிய வழக்கில் 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார், கடந்த 4ஆம் தேதி தேனியில் கைது செய்து கைது செய்தனர். பின்னர் சவுக்கு சங்கர் கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.
சவுக்கு சங்கர் மீது சென்னையில் அடுத்தடுத்து பல வழக்குகள் பதிவானதால் அவரை குண்டர் சட்டத்தில் அடைக்கச் சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நேற்று சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவைக் கோவை ஜெயிலில் இருந்த சவுக்கு சங்கரிடம் சென்னை போலீசார் வழங்கினர்.
மேலும், சவுக்கு சங்கரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்கக் கடந்த வாரம் காவல்துறை சார்பாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, காவல்துறையினர் அடுத்த வாரம் சவுக்கு சங்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதாக நீதிபதியிடம் கூறியிருந்த நிலையில் வழக்கை இன்று ஒத்திவைத்தார்.
இந்நிலையில், இன்று சவுக்கு சங்கரை கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள 4வது குற்றவியல் நீதிமன்றத்தில் காவல்துறையினர், காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் நீதிபதி சரவணபாபு முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி சரவணபாபு, சவுக்கு சங்கரை ஒரு நாள் மட்டும் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்துள்ளார். நாளை மாலை 5 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும், ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை 15 நிமிடம் சவுக்கு சங்கரை அவரது வழக்கறிஞர் சந்திக்க அனுமதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்து சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், “காவல்துறையினர் 5 நாட்கள் கஸ்டடி கேட்டு மனு அளித்த நிலையில், நாங்கள் ஒத்துழைப்பிற்குத் தயார் என்று கூறினோம். ஆனால், நீதிபதி ஒரு நாள் கஸ்டடி வழங்கியுள்ளார்.
விசாரணையின் பொழுது வழக்கறிஞர்கள் நாங்கள் அவரை பார்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தோம். அதன் அடிப்படையில், விசாரணை நடைபெறும் ஒரு நாளில் ஒவ்வொரு 3 மணி நேரத்தில் ஒரு முறை 15 நிமிடம் அவரை பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சவுக்கு சங்கருக்கு இரண்டு இடங்களில் விரிசல் உள்ளதாகக் கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது மூன்று விரிசல்கள் இருப்பது தெரியவந்துள்ளது. ஒரு மாதம் கழித்து மீண்டும் அரசு மருத்துவமனையில் மறு சிகிச்சைக்கு வர கூறியுள்ளனர்.
மேலும், சவுக்கு சங்கரை மெண்டல் பிளாக்கில் வைத்திருக்கக் கூடாது என்று சென்னை நீதிமன்றத்தில் கூறியிருந்த போதிலும், தற்பொழுது அவரை அதே பிளாக்கில் தான் வைத்துள்ளனர். போலீஸ் கஸ்டடி இருப்பதால் ஜாமீன் மனு கேட்டுத் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை தள்ளிப் போகக் கூடும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக, இன்று காலை சவுக்கு சங்கரைச் சிகிச்சைக்குப் பின்னர் வெளியே அழைத்து வரும்பொழுது, "கோவை மத்தியச் சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார். அதுமட்டுமின்றி கோவை மத்தியச் சிறை தான் உனக்குச் சமாதி" என மிரட்டுவதாகக் குற்றச்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:"கோவை மத்திய சிறை தான் உனக்கு சமாதி" என சிறைக் காவலர் மிரட்டல்? - சவுக்கு சங்கர் பகீர் குற்றச்சாட்டு - Savukku Shankar