கோயம்புத்தூர்:கோவை மாநகர காவல் ஆணையர் அறிவுரைகளின்படி, தனியார் மருத்துவமனை மற்றும் Young Indians உடன் மாநகர காவல் துறை இணைந்து நடத்தும் காவலர் மற்றும் காவலர் குடும்பத்தினருக்கான மார்பகப் புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய் மாத பராமரிப்பு இலவச மருத்துவப் பரிசோதனை முகாம், கோவை காவலர் பயிற்சி மைதான வளாகத்தில் இன்று நடைபெற்றது.
கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) இந்த முகாமை, கோவை மாநகர் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், துணை ஆணையர் சரவணன், ஆயுதப்படை உதவி ஆணையர் சேகர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கோவை மாநகர் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறியதாவது, “இந்த முகாம் மூலமாக கோவை மாநகரில் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பயனடைவார்கள். இதில் கண்டுப்பிடிக்கப்படும் பிரச்னைகளுக்கு மேற்கொண்டு சிகிச்சை அளிக்க காவல் துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.
தொடர்ந்து, கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள ராணுவ குடியிருப்பில் மின்சாரம் தாக்கி சிறுவர்கள் உயிரிழந்தது குறித்த கேள்விக்கு, “இந்த வழக்கில் முதலில் சிஆர்டிசி 174 சந்தேகத்திற்கு மாறான மரணம் என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், தொடர் விசாரணையில் 304-A வழக்கு பதிவு செய்து விபத்து என்று வழக்கு மாற்றப்பட்டது.
விபத்து ஏற்படுத்தியவர் மீதும், விபத்து ஏற்படுவதற்கு காரணமாக இருந்தவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து தற்பொழுது புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. மின்வாரியத்தில் உரிய அனுமதியில்லாமல் பூங்கா அடியில் மின்சாரம் இணைப்பு கொண்டு வந்துள்ளனர்.
அது சம்பந்தப்பட்ட நபர் மீதும், ஒப்பந்ததாரர் மீதும் புலன் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது வரை விபத்து சம்பந்தமாக யார் மீதும் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. புலன் விசாரணை முடிந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே மின்சாரம் தாக்கி குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், பூங்கா ஒப்பந்ததாரர்கள் முருகன், சீனிவாசன், எலக்ட்ரீசியன் சிவா ஆகியோர் மீது சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அஜாக்கிரதையாக மரணம் விளைவித்தல் 304 (ஏ) சட்டப் பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இன்று மாலைக்குள் மூவரும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:'நாங்கள் பொறுப்பல்ல'.. கோவையில் மின்சாரம் பாய்ந்து குழந்தைகள் உயிரிழப்புக்கு மின் வாரியம் விளக்கம்! - Coimbatore Kids Electrocuted