கோயம்புத்தூர்:கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகமும், கொடிசியா நிர்வாகமும் இணைந்து நடத்தும் 8ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா, வரும் ஜூலை 19ஆம் தேதி முதல் ஜூலை 28ஆம் தேதி வரை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த புத்தகத் திருவிழாவில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து புத்தக பதிப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும், இந்த புத்தகத் திருவிழாவிற்கு அனுமதி இலவசமாகும்.
கோவை ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் கொடிசியா தலைவர் கார்த்திகேயன் செய்தியாளர் சந்திப்பு (Credits- ETV Bharat Tamil Nadu) இந்த புத்தகத் திருவிழா குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கூறுகையில், “ஆண்டுதோறும் இந்த புத்தக திருவிழாவை வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். அதேபோல் இந்த ஆண்டும் கோவை மாவட்ட நூலகத் துறை மற்றும் கொடிசியா நிர்வாகம் இணைந்து புத்தகத் திருவிழாவை நடத்த உள்ளளோம்.
இதில் பல்வேறு நிகழ்ச்சிகள், விருதுகள், போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2 கோடி அளவிலான புத்தகங்கள் விற்பனை ஆனது. அதேபோன்று இந்த ஆண்டும் எதிர்பார்க்கிறோம். Book Donation மூலம் 2,000 புத்தகங்கள் சிறைவாசிகளுக்காக அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் Donation Drive நடத்த உள்ளளோம். பள்ளி மாணவர்களை அந்தந்த பள்ளிகளில் இருந்து அழைத்து வரவும் திட்டமிட்டு கொண்டிருக்கிறோம்.
மேலும், 285 அரங்குகள் அமைக்கப்பட்டு, பல்வேறு மாநிலங்களில் இருந்து பதிப்பாளர்கள் வருவார்கள். அதேபோல், இந்த புத்தகத் திருவிழாவில் அனைத்து வயதினர்களுக்கான புத்தகங்களும் இடம்பெற உள்ளது. மேலும், இம்முறை மாணவர்களுக்கு பல்வேறு இலக்கிய போட்டிகள் நடத்த திட்டம் உள்ளது. மேலும், ஜூலை 19ஆம் தேதி முதல் ஜூலை 28ஆம் தேதி வரை விடுமுறை இல்லாமல் தொடர்ந்து இந்த புத்தகத் திருவிழா நடைபெறும் என்பதால் பொதுமக்கள் அனைவரும் இதில் பங்கு பெற்று பயனடைய வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாள்ர்களிடம் பேசிய கொடிசியா தலைவர் கார்த்திகேயன், “இந்த புத்தகத் திருவிழாவை அமைச்சர் முத்துசாமி திறந்து வைக்க உள்ளார். மேலும், காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த புத்தகத் திருவிழா நடைபெறும். இதில் மாணவர்கள் பங்கேற்கவும் பல்வேறு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற நிகழ்வுகள் மாணவர்களுக்கு புத்துணர்ச்சியையும், ஊக்கத்தையும் அளிக்கும் விதமாக அமையும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.
கோவை புத்தக திருவிழாவில் நடைபெற இருக்கும் முக்கிய நிகழ்வுகள்:
- ஜூலை 19- இளம் படைப்பாளர்களுக்கான விருது வழங்கும் விழா.
- ஜூலை 20- இல்லம் தேடிக் கல்வி பயிற்றுநர்களுக்கான நிகழ்வு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்ச்சி.
- ஜூலை 21-கவிஞர் உமா மோகன் பங்கேற்கும் கவியரங்கம், இளம் படைப்பாளிகளுக்கான பயிற்சி பட்டறை, ஜேம்ஸ் வசந்தன் குழுவினரின் இன்னிசையில் சங்கத்தமிழ்பாடல்கள்.
- ஜூலை 22- 8,9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் மற்றும் ஆங்கில பேச்சுப் போட்டிகள், டாக்டர் கவிதாசனின் மாபெரும் கவியரங்கம், செல்லதுரை வழங்கும் பெருங்கதையாடல்.
- ஜூலை 23- கோவை நன்னெறி கழகம் வழங்கும் முனைவர் கலையமுதன் பங்கேற்கும் பட்டிமன்றம், 50 ஆண்டுகள் வளர்ச்சியும் சாதனைகளும் என்ற தலைப்பில் ஹைகூ கவிதைகள், சாழல் சொற்போர்
- ஜூலை 24- அறிவுகேணி நிகழ்வில் கொங்கு நாட்டு கல்வியாளர்கள், மற்றும் மாணவிகள் கவியரங்கம், பேரூர் தமிழ் மன்றம் சார்பில் கவியரங்கம், புலம் தமிழ் இலக்கிய பலகை வழங்கும் கவியரங்கம், தியேட்டர் மெரினா வழங்கும் அந்நியள் நாடகம்
- ஜூலை 25-11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் மற்றும் ஆங்கில பேச்சுப் போட்டி, சுதந்திர தீபங்கள் நாடகம், உடலுக்கும் உள்ளத்திற்கும் ஏற்ற பயணங்கள் என்ற தலைப்பில் மருத்துவர் சிவராமனின் சிறப்புரை.
- ஜூலை 26-கல்லூரி மாணவர்களுக்கான தமிழ் மற்றும் ஆங்கிலப் போட்டி, சிறுகதை மற்றும் குறும்பட போட்டிகளுக்கான பரிசு வழங்குதல், மரபின் மைந்தன் முத்தையாவின் கவியரசு கண்ணதாசனின் இன்னிசை பட்டிமண்டபம்
- ஜூலை 27- தொழிலகம் தோறும் நூலகம் எனும் தலைப்பில் தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்தினர்களுக்கான பல்வேறு போட்டிகள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சிறப்புரை.
- ஜூலை 28- ஓசை சுற்றுச்சூழல் அமைப்பு வழங்கும் பருவநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கம் தொடர்ந்து இரண்டு பட்டிமன்றங்கள்.
இதையும் படிங்க:தமிழக உள்துறை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் பணியிட மாற்றம்; தமிழக அரசு அதிரடி உத்தரவு!