தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவை குண்டுவெடிப்பு கைதி பாஷா உயிரிழப்பு! 2000 போலீசார் பாதுகாப்புகாகக் குவிப்பு! - COIMBATORE BLAST 1998

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அல்-உம்மா தலைவர் பாஷா சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

உயிரிழந்த பாஷா - கோப்புப்படம்
உயிரிழந்த பாஷா - கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

கோயம்புத்தூர்:கோவையில் 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. குறிப்பாக காந்திபுரம், அரசு மருத்துவமனை, டவுன்ஹால், ஆர்எஸ்புரம் உள்ளிட்ட 18-க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது.

இந்த சம்பவத்தில் 50 பேர் பலியானார்கள். 200க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தியது அல்-உம்மா அமைப்பை சார்ந்தவர்கள் எனக் கண்டுபிடித்தனர். இதனையடுத்து அல்-உம்மா அமைப்பின் தலைவர் பாஷா, செயலாளர் அன்சாரி, உள்ளிட்ட 160க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து, அல்-உம்மா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் பாஷா உள்ளிட்ட 30 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து பாஷா தாக்கல் செய்த மனுவை நிராகரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவரது ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.

இதனையடுத்து, சிறையில் அடைக்கப்பட்ட பாஷா, கடந்த 18.4.2024 முதல் பரோலில் இருந்து வருகிறார். அவரது பரோல் வரும் 19.1.2025 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இதனிடையே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பாஷா கோவை அவினாசி சாலை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதையும் படிங்க:'பாம்பு நாக்கு' இன்ஸ்டா பிரபலத்திற்கு செக் வைத்த போலீஸ் - டாட்டூ கடைக்கு சீல்!

இந்நிலையில், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவரது உடல் உக்கடம் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. நாளை அவரது உடல் அடக்கம் செய்யப்படலாம் என அவரது உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீசார் தீவிர கண்காணிப்பு:

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான பாஷா உயிரிழந்த நிலையில், அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கோவை நகரில் பல்வேறு இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உயிரிழந்த பாஷாவின் உடல் நாளை காலை தெற்கு உக்கடத்தில் உள்ள ஹைதர் அலி திப்பு சுல்தான் சுன்னத் ஜமாத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

இதனைத் தொடர்ந்து அவரது வீட்டிலிருந்து பள்ளிவாசல் வரை உடல் எடுத்து செல்லும் பகுதியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மேலும், விடுமுறையில் சென்றுள்ள அனைத்து நிலை காவலர்களும் உடனடியாக பணிக்கு வருமாறு கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். இரவு நேர ரோந்து பணியையும் தீவிர படுத்த காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details