நீலகிரி:கோயம்புத்தூர் மாவட்டம்மருதமலை வனப்பகுதியில் கடந்த மே 30ஆம் தேதி உடல் நலம் பாதித்த நிலையில் தரையில் படுத்து கிடந்த 40 வயது பெண் யானைக்கு, ஐந்து நாட்களாக வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர். அப்போது, அந்த பெண் யானையுடன் இருந்த மூன்று மாத ஆண் குட்டி யானை, ஜூன் 1ஆம் தேதி மற்றொரு யானைக் கூட்டத்துடன் இணைந்து வனப்பகுதிக்குள் சென்றது. பின்னர், உடல் நலம் தேறிய தாய் யானை, கடந்த ஜூன் 3ஆம் தேதி வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஜூன் 4ஆம் தேதி கூட்டத்தில் இருந்து பிரிந்து வந்த குட்டி யானையை வனத்துறையினர் மீட்டு தாயுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்காக ஆனைமலை டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் இருந்து அனுபவம் வாய்ந்த பாகன்கள், காவடி உள்ளிட்ட 4 பேர் வரவழைக்கப்பட்டு, குட்டி யானையைச் சேர்க்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தது. மேலும், தாய் யானை குட்டியை ஏற்காத நிலையில், மற்றொரு யானைக் கூட்டத்துடன் குட்டியைச் சேர்க்க வனத்துறையினர் முயற்சித்தனர்.