தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மேளதாளங்களுடன் வேட்புமனு தாக்கல்! - ADMK in Coimbatore - ADMK IN COIMBATORE

Covai ADMK candidate Singhai Ramachandran: பாஜக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட ஜிஎஸ்டி மற்றும் திமுக கொண்டு வந்த அதிக மின்கட்டணம் காரணமாகத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு சிரமத்துக்குள்ளாகி வருவதாகக் கோவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் விமர்சித்துள்ளார்.

கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மேளதாளங்களுடன் வேட்புமனு தாக்கல்
கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மேளதாளங்களுடன் வேட்புமனு தாக்கல்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 25, 2024, 4:21 PM IST

கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மேளதாளங்களுடன் வேட்புமனு தாக்கல்

கோயம்புத்தூர்: 'விசன் 2030' என்கிற வகையில் கோயம்புத்தூரை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்ல திட்டங்கள் வழங்க உள்ளதாக அதிமுக சார்பில் கோவையில் போட்டியிடும் வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் கூறியுள்ளார். கோவை நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியரிடம் தனது வேட்பு மனுவினை இன்று (மார்.25) தாக்கல் செய்தார்.

முன்னதாக அண்ணா சிலை அருகே உள்ள அதிமுக கோவை மாவட்ட அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் இருந்து மேளதாளங்கள் முழங்க, அதிமுக வேட்பாளர் மற்றும் தொண்டர்கள் ஊர்வலமாக வந்தனர். வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், "அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் மூத்த நிர்வாகிகளின் ஆசீர்வாதத்தோடு இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன்.

கோயம்புத்தூருக்கு வரும் மக்கள் இதன் குளிர்ச்சியான காலநிலை காரணமாகவும் தண்ணீருக்காகவும் இங்கேயே தங்கி விடுவார்கள். அப்படிப்பட்ட கோவையில் 50 ஆண்டுக்கால வளர்ச்சியினை, ஐந்து ஆண்டுகளில் அதிமுக வழங்கியது. ஆனால் இப்போது அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். 'விசன் 2030' என்கிற வகையில் கோயம்புத்தூரை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவும், கோவை மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாகவும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கும் விதத்திலும் திட்டங்களை வழங்க உள்ளோம்.

கடந்த ஆட்சிக் காலத்தில் கோயம்புத்தூருக்கு எந்த திட்டங்களும் வந்து சேரவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வெளியில் வருவதே இல்லை. தேர்தல் பிரச்சாரத்தில் செங்கல்லை எடுத்துக்காட்டியவர் நாடாளுமன்றத்தில் காட்டி இருக்கலாம். அனைத்து இயற்கை வளங்களையும் கொண்ட கோவை, உயர்கல்விக்கான மையமாகவும் உள்ளது.

சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள், டெக்ஸ்டைல் நிறுவனத்தினர் பாஜக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட ஜிஎஸ்டி மற்றும் திமுக கொண்டு வந்த அதிக மின்கட்டணம் காரணமாகப் பாதிக்கப்பட்டு சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இவற்றையெல்லாம் சரி செய்து கோவையை அடுத்த கட்டத்திற்கு அதிமுக கொண்டு செல்லும்.

கோவையைச் சேர்ந்த தொழில்துறையினருக்கு அரணாக இருந்து அவர்களுக்குப் பொருளாதார சுதந்திரத்தைப் பெற்றுத் தருவோம். நேரடியாக மோடியுடன் தொடர்பில் இருக்கிறேன், செங்கல்லை காட்டுகிறேன் என்பவர்களால் கோவைக்கு எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. கடந்த 10 ஆண்டுக் காலத்தில், மோடியின் ஆட்சிக் காலத்தில் கோயம்புத்தூர் எந்த வளர்ச்சியையும் காணவில்லை.

கரூரிலிருந்து வந்தவர்களுக்கும், சென்னையிலிருந்து வந்தவர்களுக்கும் நமது ஊரை பற்றித் தெரிய வாய்ப்பில்லை. கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த நான், இங்கு உள்ள பிரச்சனைகளை நன்கு அறிந்தவன். கோவையின் வளர்ச்சிக்குச் சிறப்பாகச் செயல்படுவேன்”, என தெரிவித்தார். அவரோடு அதிமுக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: கோவில்பட்டியில் காங்கிரஸ் தொண்டர்கள் தீக்குளிக்க முயற்சி - குமரி எம்பி விஜய் வசந்த் அளித்த விளக்கம் - Vijay Vasanth About INDIA Alliance

ABOUT THE AUTHOR

...view details