மீனம்பாக்கம்: சென்னைக்கு வெளிநாடுகளில் இருந்து, பெருமளவு போதைப் பொருள் கடத்திக் கொண்டு வரப்படுவதாக, சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை தனிப்படை அதிகாரிகள், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று, அதிகாலையில் வந்து வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது தாய்லாந்து நாட்டில் இருந்து தனியார் பயணிகள் விமானம் ஒன்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்த சுமார் 26 வயது இளைஞர் ஒருவர், சுற்றுலாப் பயணிகள் விசாவில், லாவோஸ் நாட்டில் இருந்து, தாய்லாந்து வழியாகச் சென்னைக்கு வந்திருந்தார்.
சூட்கேஸில் ரகசிய அறை: மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் அவரை நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில், அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார். இதனையடுத்து அவரை வெளியே விடாமல், சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று, தனி அறையில் வைத்து, மேலும் தீவிரமாக விசாரணை நடத்தினர். அதோடு அவருடைய சூட்கேஸை ஆய்வு செய்தபோது, சூட்கேஸில் ரகசிய அறை இருந்ததை கண்டுபிடித்தனர்.
அந்த ரகசிய அறைக்குள் மூன்று பார்சல்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அந்த பார்சல்களை அதிகாரிகள் கைப்பற்றி, பிரித்துப் பார்த்தனர். அதற்குள் போதை பவுடர் இருந்ததை கண்டுபிடித்தனர். அந்தப் போதை பவுடரை எடுத்து ஆய்வுக்கூடத்தில் பரிசோதித்த போது, அது மிகவும் விலை உயர்ந்த கொக்கையின் போதைப் பொருள் என்று தெரிய வந்தது.