சென்னை:வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரமணாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்டப் பகுதிகளையும், எழிலகத்தில் உள்ள மாநில அவசரக் கால செயல்பாட்டு மையத்தையும் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இதையடுத்து முதலமைச்சர் புயலின் தாக்கம் குறித்தும், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் வெள்ள நிவாரண பணியில் குறித்தும் அமைச்சர்கள் பொன்முடி, எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், சிவசங்கர், செந்தில் பாலாஜி , சி.வி கணேசன் மற்றும் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu) ஆலோசணைக்கு பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சென்னையில் கனமழை பெய்துள்ளது. ஆனால், தமிழ்நாடு அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கவில்லை. வடசென்னை பகுதிகளில் ராட்சத மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
1686 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளது. 21 சுரங்கப் பாதைகளில் மழைநீர் அகற்றப்பட்டு போக்குவரத்து சீராக உள்ளது. கணேசபுரம் சுரங்கப் பாதையில் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் 32 முகாம்கள் அமைக்கப்பட்டு 1018 நபர்கள் தங்க வைக்கப்பட்டு, தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. 9,10,000 உணவு பொட்டலங்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளது.
வரலாறு காணாத அளவில் விழுப்புரம் மாவட்டத்தில் மழை பெய்துள்ளது. அதனை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி , சிவசங்கர், எம் ஆர் கே பன்னீர்செல்வம் களத்தில் உள்ள நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அனுப்பி வைத்துள்ளோம்.
இதையும் படிங்க:மழைநீர் அகற்றப்பட்டு திறக்கப்பட்ட மேட்லி சப்வே! இயல்பு நிலையில் மாம்பலம்!
தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை உள்ளிட்ட 12 குழுக்கள் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு பணியில் உள்ளனர். விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் 26 முகாம்களில் 1373 நபர்கள் தங்கள் வைக்கப்பட்டுள்ளனர்.
மழை வெள்ள பாதிக்கப்பட்ட விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தேவையான நிதியை வழங்க, ஆய்வுக் குழு அனுப்பி வைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்த உள்ளோம். பல மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. முடிந்த பிறகு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் பயிர் சேதம் கணக்கிடப்பட்டு அதற்கான நிவாரண நிதியும் வழங்குவதற்காக மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளேன்.
புயல் சேதங்கள் குறித்து மத்திய அரசிடம் நிதி கோருவது குறித்து நாளை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறும். கடந்த காலங்களில் மத்திய அரசிடமிருந்து கோரப்பட்ட பேரிடர் நிதி முழுமையாக கிடைக்கப் பெறாத நிலையில் இந்த முறையும் கோரிக்கை வைப்போம். மத்திய அரசு நிதி தரும் என நம்புகிறேன். அப்படி தரவில்லை என்றாலும் கடந்த ஆண்டை போல் மாநில அரசு சமாளிக்கும்” என்றார்.