சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று பள்ளிக் கல்வித் துறை சார்பில், இந்தியாவின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. அப்போது, முதல்வர் ஸ்டாலின் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கினார்.
அதனை தொடர்ந்து உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது; தமிழ்நாட்டு மாணவர்கள் அனைத்திலும் சிறந்தவர்களாக எப்போது உயர்வார்களோ என்று பாரதிதாசன் ஏங்கினார். இப்போது அவர் நம்மிடையே இருந்திருந்தால் உங்களை எல்லாம் பார்த்து, ''என்னருமை மாணவச் செல்வங்களே, ஓங்கிடும் கீர்த்தி எய்தி விட்டீர்கள்'' என்று பாராட்டி மகிழ்ந்திருப்பார். இப்படிப்பட்ட உயர்வை அடைந்திருக்கின்ற மாணவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
பள்ளிக்கல்வித் துறையின் முன்னெடுப்பு இல்லாமல் இந்த சாதனையை நாம் அடைந்திருக்க முடியாது. இந்தத் துறையின் அமைச்சர், நான் பார்த்து வளர்ந்த பிள்ளை அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும், துறை அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்களை நான் முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.
54 மாற்றுத்திறனாளி மாணவர்கள் முதன்மை உயர் நிறுவனங்களில் சேர்ந்திருக்கிறார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். அதற்காக அந்தத் துறையின் அமைச்சர் என்கின்ற முறையில் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் செய்திருப்பது உங்களுடைய வேலை இல்லை சேவை அது. எதிர்காலக் கல்விச் சொத்துக்களை உருவாக்கி இந்த சமூகத்துக்கும், நாட்டிற்கும் கொடுத்திருக்கிறீர்கள். உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கின்ற பொழுது மாணவர்களுடைய அறிவாற்றல், நாளைய தினம் தமிழ்நாட்டுக்கு மட்டுமில்லை, இந்தியாவுக்கு மட்டுமில்லை, உலகுக்கே பயன் தரப்போகிறது.
அந்த வகையில், உலகின் அறிவுச் சொத்துக்களான இந்த மாணவர்களை பார்க்கும்போது எனக்கு உள்ளபடி பெருமையாக இருக்கிறது. ஏறத்தாழ, 10 ஆண்டுகளுக்குப் பிறகு அரசுப் பள்ளிக் குழந்தைகள், இந்தியாவின் முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களுக்கு நாம் ஆட்சிக்கு வந்த இந்த மூன்று ஆண்டுகளில் சாரை சாரையாக படிக்கப் போகிறார்கள். 2022-ஆம் ஆண்டு 75 மாணவர்களும், 2023-ஆம் ஆண்டு 274-ஆக ஆனது. இந்த ஆண்டு, அது மேலும் இரண்டு மடங்காகி, 447 மாணவர்கள் இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றனர். இன்னமும் பல நிறுவனங்களில் சேர்க்கை நடத்தி முடிக்கவில்லை. உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடுதான் இந்தியாவிலேயே நம்பர் ஒன். நாம் தொடங்கிய புரட்சிகரமான புதுமைப்பெண் திட்டத்தின் பயனாக, கல்லூரியில் சேருகின்ற மாணவியர் எண்ணிக்கை 34 விழுக்காடு உயர்ந்திருக்கிறது.