சென்னை: 2023ஆம் ஆண்டு ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் தென் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் ஆகியவை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 70 கூட்டுக்குடிநீர் திட்டங்களை மறு சீரமைக்க நிர்வாக அனுமதி வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக, தமிழ்நாட்டின் வடக்கு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட 12 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மற்றும் வடகிழக்கு பருவ மழையினால் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக தமிழ் நாட்டின் தென் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட 70 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் ஆகியவற்றை ரூபாய் 148.64 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு செய்து செயல்பாட்டிற்கு கொண்டு வர தமிழ்நாடு முதலமைச்சர் நிர்வாக அனுமதி வழங்கி ஆணையிட்டுள்ளார்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் 544 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் பராமரிக்கப்பட்டு, தமிழ்நாட்டில் உள்ள சுமார் 4.53 கோடி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதி மக்களும் பயன்பெறும் வகையில், கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு, அவை பல்வேறு நிலைகளில் செயலாக்கத்தில் உள்ளன.
ஊரக குடியிருப்பு பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கும் உயிர் நீர் இயக்கத்தில், தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் உள்ள 125.24 லட்சம் வீடுகளில் இதுவரை 101.95 லட்சம் வீடுகளுக்கு (81.41%) குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், கன்னியாகுமரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களின் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 100 சதவீதம் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.