சென்னை:தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விதி 110-ன்கீழ் பேசியதாவது:
"இளைஞர் நலனை, இளைஞர் எதிர்காலத்தை இளைஞர்களின் மேன்மையை எப்போதும் மனதில் வைத்து திட்டங்களைத் தீட்டி வருவது திராவிட மாடல் ஆட்சியின் தனித்தன்மை இளைய சக்தியை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மிக மிகக் கவனமாகச் செயல்பட்டு வருகிறோம்.
பணி நியமனம்: கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகிய தேர்வு முகமைகள் வாயிலாக 32 ஆயிரத்து 774 நபர்களுக்குப் பல்வேறு அரசுத் துறைகளில் நேரடிப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டன. அதேபோல் உள்ளாட்சி அமைப்புகள், அரசுத் துறை நிறுவனங்கள் போன்ற பல்வேறு அரசு அமைப்புகளில் 32 ஆயிரத்து 709 இளைஞர்கள் பணிநியமனம் பெற்றனர்.
மொத்தம் 65 ஆயிரத்து 483 இளைஞர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளில் அரசுப் பணிநியமனம் வழங்கப்பட்டுள்ளது. அரசுத் துறைகளில் மட்டுமல்லாது, பெருந்தொழில் மற்றும் குறு, சிறு நிறுவனங்களின் மூலமாகவும் ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளோம். அரசு மேற்கொண்ட பல்வேறு முன்னெடுப்புகளின் காரணமாகவும், மிகச்சிறப்பான முறையிலே நடத்தி முடிக்கப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் கிடைக்கப் பெற்ற பெரும் முதலீடுகள் காரணமாகவும் இலட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் கடந்த 3 ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் அமைப்பு சார்ந்த தனியார் துறைகளில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் குறித்த புள்ளி விவரங்கள் மத்திய அரசின் தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனத்தின் மூலம் பெறப்பட்டது. இது மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஓர் அமைப்பாகும். இந்த நிறுவனத்தின் தரவுகளின்படி, கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 77 லட்சத்து 78 ஆயிரத்து 999 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.