சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (30.11.2024) சென்னை, சேப்பாக்கம், எழிலகத்தில் அமைந்துள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று, ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வரும் மேற்கொள்ளப்பட்டு குறித்து காணொலிக் காட்சி வாயிலாக திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
புயல் காற்று மற்றும் கனமழை எச்சரிக்கை :வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று மாலை காரைக்கால் மற்றும் மாமல்லபுரத்திற்கு இடையே மணிக்கு 70 முதல் 90 கிலோ மீட்டர் காற்றின் வேகத்துடன் கரையைக் கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து, இன்று (30.11.2024) காலை 11.00 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருடன் ஆலோசனை :இன்று (30.11.2024) கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாகவும், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருடனும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழை விபரம், முகாம்கள் விபரம், தண்ணீர் வெளியேற்ற மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து கேட்டறிந்து தக்க அறிவுரைகள் வழங்கினார்.
நிவாரண முகாம் :புயல் மற்றும் மழையினால் பாதிக்கப்படக் கூடிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை முன்கூட்டியே நிவாரண முகாம்களில் தங்க வைக்கவும், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படும் நபர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தினார்.
மழை நீர் வெளியேற்றம் மற்றும் உட்கட்டமைப்பு சீரமைப்பு : மழை நீர் தேங்கும் இடங்களில், உடனடியாக மழை நீரை வெளியேற்ற மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும், புயலின் காரணமாக மரங்கள் விழுந்தால் அதனை உடனே அப்புறப்படுத்தி பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், உடனடியாக மின் கட்டமைப்புகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை சீரமைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
மருத்துவ சேவை :மழைக் காலங்களில் தொற்று நோய்கள் ஏற்படுவதைத் தடுக்க மருத்துவ முகாம்களை நடத்தவும், அரசு மருத்துவமனைகளில் போதுமான மருந்துகளுடன் பொது மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கவும் அறிவுறுத்தினார்.
தற்போதைய நிவாரணப் பணிகள் :கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள நிவாரண மைய கட்டடங்கள் அனைத்து வசதிகளுடன் தயாராக உள்ளன. தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 5 நிவாரண முகாம்களில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்தனர்.
அம்மா உணவகத்தில் இலவச உணவு : சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று முழுவதும் மக்களுக்கு உணவு இலவசமாக வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
கட்டுப்பாட்டு அறை :மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி அலுவலக கட்டுப்பாட்டு அறைகளுக்கு பொதுமக்களிடமிருந்து தொலைப்பேசி வாயிலாக பெறப்படும் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தினார்.