சென்னை:2026 தேர்தல் மட்டுமல்ல, அடுத்தவரக்கூடிய எந்த தேர்தலாக இருந்தாலும், அதில் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலய கலைஞர் அரங்கில், முன்னாள் கும்மிடிப்பூண்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் வேணு இல்லத் திருமண விழா இன்று நடைபெற்றது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும், நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, சேகர் பாபு மற்றும் சட்டமன்ற, மாமன்ற உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றனர்.
இதனையடுத்து, விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, “மக்களால் போற்றப்படக்கூடிய ஆட்சியாக திமுக இருக்கிறது. மிசா சட்டத்தில் எங்களுடன் கைதாகி இருந்த போது பாதுகாவலராக, நண்பராக விளங்கியவர் வேணு. அவரின் திருமணம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. இன்று அவரின் பேரன் திருமணத்தை நடத்தி வைத்ததில் பெருமை கொள்கிறேன்.
நடந்து முடிந்த முப்பெரும் விழாவில் கலைஞர் விருதை வேணுவுக்கு வழங்கியுள்ளோம். திமுகவைப் பொறுத்தவரை, மக்கள் பணியாற்றுவதில் சிறந்து விளங்கி வருகிறோம். மக்களுக்காக உறுதிமொழிகளை மட்டுமல்லாமல், தராத வாக்குறுதிகளையும், சாதனைகளையும் திமுக செய்து வருகிறது. மக்களால் போற்றப்படும் ஆட்சியை திமுக செய்து வருகிறது.
ஜோசியராக மாறிய எடப்பாடி:ஆனால், மக்களால் ஓரங்கட்டப்பட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சி சரிந்து கொண்டிருப்பதாக பொறாமையில் பேசிக் கொண்டிருக்கிறார். திமுகவின் கூட்டணி விரைவில் உடையப் போகிறது என்று கற்பனையில் எடப்பாடி பேசுகிறார். எடப்பாடி பழனிசாமி கற்பனையில் மிதந்து கொண்டிருக்கிறார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், தற்போது அவர் ஜோசியராகவே மாறிவிட்டார். எப்பொழுது அவர் ஜோசியராக மாறினார் என்று எனக்கு தெரியவில்லை.