சென்னை:பெரியாருக்கும், கலைஞருக்கும் கிடைக்காத வாய்ப்பு நல்லகண்ணுவுக்கு கிடைத்துள்ளது. நூறு வயதை கடந்தும் தமிழ் சமூகத்துக்கு தொண்டாற்ற தயாராக இருக்கிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
விடுதலை போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான இரா.நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா இன்று (டிசம்பர் 29) ஞாயிற்றுக்கிழமை கலைவாணர் அரங்கில் நடைப்பெற்றது. இதில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, ‘நூறு கவிஞர்கள் நூறு கவிதைகள்’ என்ற நூலினை வெளியிட்டு, நல்லகண்ணுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி சிறப்பித்துள்ளார்.
பின்னர், விழா மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, “நூற்றாண்டு விழா நாயகராக இருக்கக்கூடிய நல்லகண்ணு அவர்களின் புகழை, சிறப்பை, அவர் தியாகத்தை இன்றைக்கு போற்றிக் கொண்டிருக்கிறோம். சமத்துவச் சமுதாயத்தை அமைப்பதற்கான நம்முடைய பணியில் வெல்வதற்காக வாழ்த்துங்கள் என்று கேட்க வந்திருக்கிறோம். உங்கள் வாழ்த்தைவிட எங்களுக்குப் பெரிய ஊக்கம் எதுவும் கிடைத்துவிட போவதுமில்லை.
தந்தை பெரியாருக்கும், தலைவர் கலைஞருக்கும் கிடைக்காத வாய்ப்பு நல்லகண்ணு அய்யா அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. 100 வயதைக் கடந்து நமக்கு வழிகாட்டியும், தமிழ்ச் சமுதாயத்துக்காக இன்னும் உழைக்கத் தயாராக இருக்கிறார்.
நல்லகண்ணுவின் 80-ஆவது பிறந்த நாள் விழாவில் கலைஞர் கருணாநிதி பங்கெடுத்துக் கொண்டு வாழ்த்தியுள்ளார். அப்போது பேசிய கலைஞர், “வயதால் எனக்குத் தம்பி; அனுபவத்தால் எனக்கு அண்ணன்”, “என்னைவிட வயதால் இளையவர், ஆனால், அனுபவத்தாலும், தியாகத்தாலும் நம்மையெல்லாம் விட மூத்தவர்” என்று குறிப்பிட்டார். “நல்லகண்ணு வாழும் காலத்தில் நாம் வாழ்கிறோமே அதுதான் பெருமை”.
2001-இல் நடைபெற்ற அதிமுக ஆட்சியில் தலைவர் கலைஞர் அராஜகமாக கைது செய்யப்பட்டார். அப்போது அந்த கைதை கண்டித்து முதன்முதலாக அறிக்கை வெளியிட்டவர் தோழர் நல்லகண்ணு. அப்போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அதிமுகவின் கூட்டணியில் இருந்தார்கள். கலைஞர் தாய் காவியம் தீட்டியபோது, அதற்கு நல்லகண்ணு அய்யா அவர்களிடம்தான் அணிந்துரை வாங்கினார்.
இதையும் படிங்க:பா.ம.க. வில் தந்தை Vs மகன் மோதல் : புதிய அலுவலகம் திறந்தார் அன்புமணி
தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு, அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கினார் கலைஞர். அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு லட்சம் ரூபாய் அய்யாவுக்கு கொடுக்கப்பட்டது. அதில் ஐம்பதாயிரத்தை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இன்னொரு ஐம்பதாயிரத்தை விவசாய சங்கத்திற்கும் கொடுத்துவிட்டார். நான் 2022-இல் தகைசால் தமிழர் விருதை வழங்கினேன். அப்போதும் ரூ.10 லட்சம் அரசு தரப்பில் வழங்கப்பட்டது. ஆனால், அவற்றுடன் ரூ. 5 ஆயிரம் சேர்த்து, ரூ. 10 லட்சத்து 5 ஆயிரத்தை தமிழ்நாடு அரசுக்கே நிவாரண நிதியாக வழங்கினார்.
இயக்கத்திற்காகவே இயக்கமாகவே வாழ்பவர்:
இயக்கம் வேறு, தான் வேறு என்று நினைக்காமல், இயக்கத்திற்காகவே இயக்கமாவே வாழ்ந்துகொண்டு இருக்கக்கூடியவர். உழைப்பால் வந்த பணத்தையெல்லாம் கட்சிக்காகவே கொடுத்தார். அதனால்தான் வரலாற்றில் இன்றைக்கு உயர்ந்து நிற்கிறார். 12 வயதில் போராட்டக்காரனாக உருவாகி, 15 வயதில் பொதுவுடைமைக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, 18 வயதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டார்.
தாமிரபரணியைக் காக்க அவர் நடத்திய போராட்டம் குறித்து, சென்னை உயர்நீதிமன்றம், “நமக்கெல்லாம் தனிப்பட்ட வேலை என்பது வீட்டு வேலையாக அமைகிறது. ஆனால், இந்த மனிதருக்கு எந்த நேரமும் பொதுமக்களைப் பற்றிய சிந்தனையும், அவர்களுக்காக உழைப்பதைத் தவிர வேறு வேலையே இல்லை” என்று பாராட்டியது. ஒரு இலட்சியத்திற்காக உண்மையாக உழைத்தால் அனைத்து அமைப்புகளின் நன்மதிப்பையும் பெறலாம் என்று நிரூபித்திருப்பவர்.
நல்லகண்ணு பாதையில் நாமும்:
திராவிட இயக்கத்திற்கும், பொதுவுடமை இயக்கத்திற்குமான அரசியல் நட்பு இடையிடையே விடுபட்டிருக்கலாம். ஆனால், கொள்கை நட்பு என்பது எப்போதும் எந்த சூழ்நிலையிலும் தொடரும். திராவிட இயக்கத்திற்கும், பொதுவுடமை இயக்கத்திற்குமான அரசியல் நட்பு இடையிடையே விடுபட்டிருக்கலாம். ஆனால், கொள்கை நட்பு என்பது எப்போதும் எந்த சூழ்நிலையிலும் தொடரும். அது தொடரக்கூடியது. ஒற்றுமையையும், ஒரே சிந்தனையும் கொண்டு, தோழர் நல்லகண்ணு அவர்களின் வழித்தடத்தில் நாமும் நடப்போம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.