சென்னை:நான் முதல்வன் திட்டம் முதலமை்ச்சரின் கனவு திட்டமாக 2022 மார்ச் 1ஆம் தேதி அவரின் பிறந்த நாளில் துவக்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவர்களின் திறன்களை வளர்ப்பதற்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்களுக்கு திறன்களை வளர்க்கும் வகையில் தொடர்பு ஆங்கிலம், பொறியியல் மாணவர்களுக்கு தொழில் சார்ந்தப் திறன்களும் வளர்க்கப்படுகிறது.
மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் வகையில் தொழில் திறன் பயிற்சியும் வழங்கப்படுவதுடன், நவீனத் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப பாடத்திட்டத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. திறன் மேம்பாட்டிற்கான திட்டம் வெற்றிகரமாக 2 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்று, வேலைவாய்ப்புகளையும் பெற்று வருகின்றனர்.
நான் முதல்வன் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் (British Council) இணைந்து நடத்திய S.C.O.U.T (Scholars for Outstanding Undergraduate Talent in Tamil Nadu) திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டின் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 1267 விண்ணப்பம் செய்தனர். அவற்றிலிருந்து 100 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் முதலில் 24 மணி நேர ஆன்லைன் பயிற்சியில் பங்கேற்று, அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 11 மாணவர்களும், 14 மாணவியர்களும், ஜூன் 9 முதல் 16 வரை இங்கிலாந்தின் Durham பல்கலைக்கழகத்தில் தரவு அறிவியல் (Data Science) மற்றும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆகிய முன்னணித் துறைகளில் ஒரு வார காலம் நேரடியாகப் பயிற்சி பெற்றனர்.
இத்திட்டம் தமிழ்நாட்டைச் சேர்ந்த திறமையான கல்லூரி மாணவர்களுக்குச் சர்வதேச அனுபவம் மற்றும் மேம்பட்ட திறன்களைப் பெறுவதற்கான அரிய வாய்ப்புகளைத் தந்துள்ளது. இத்திட்டத்திற்காக, மாணவர்களைத் தேர்வு செய்து, அவர்களின் பயணம், தங்குமிடம் மற்றும் பயிற்சி முதலிய செலவுகளை தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து ஏற்றுக் கொண்டுள்ளன.
S.C.O.U.T பயிற்சி பெற்று தமிழ்நாடு திரும்பிய இந்த 25 மாணவர்களும், இன்று (ஜூன் 17) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்து தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு, அவர்களின் வாழ்த்துகளையும் பெற்றனர்.