சென்னை: தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் துவங்கியது. இன்று ஆளுநர் உரை மீதான விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர், “என் கையில் முதலமைச்சர் என்ற பொறுப்பு வந்து 33 மாதங்கள் ஆகிறது. இவை ‘முன்னேற்ற மாதங்கள்’ ‘சாதனை மாதங்கள்’ இந்தியாவின் பொருளாதாரத்துக்கு 9 விழுக்காடு பங்கைத் தருகிறது, தமிழ்நாட்டின் பொருளாதார வளம். இது, திராவிட மாடல் ஆட்சியின் முதல் சாதனை.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அளவில், தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது, இது இரண்டாவது சாதனை. ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சி 7.24 விழுக்காடாக இருக்கும்போது, தமிழ்நாட்டின் வளர்ச்சியானது 8.19 விழுக்காடாக உயர்ந்துள்ளது, இது, மூன்றாவது சாதனை. இந்திய அளவில் பணவீக்கமானது 6.65 விழுக்காடாக இருக்கும்போது, தமிழ்நாட்டில் அது 5.97 விழுக்காடாக குறைந்து உள்ளது, இது நான்காவது சாதனை.
ஏற்றுமதி தயார் நிலைக் குறியீட்டில், இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது, இது ஐந்தாவது சாதனை. மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது, இது ஆறாவது சாதனை. தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக 14-வது இடத்தில் இருந்த தமிழ்நாட்டை 3-வது இடத்துக்கு உயர்த்தி உள்ளோம், இது ஏழாவது சாதனை. கல்வியில் இரண்டாவது இடத்துக்கு தமிழ்நாட்டை உயர்த்தியது இந்த ஆட்சியின் எட்டாவது சாதனை.
புத்தாக்கத் தொழில்கள் வரிசையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பது 9வது சாதனை. இளைஞர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், விளிம்புநிலை மக்கள், ஒடுக்கப்பட்டோர் ஆகியோர் அனைவரும் மகிழ்ச்சி அடைந்து, தங்களது வாழ்க்கைத்தரம் உயர்ந்து வருவதாகச் சொல்லத் தொடங்கி இருப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியின் பத்தாவது சாதனை.