ஈரோடு: பெருந்துறையில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரியில் இளங்கலை மருத்துவ படிப்புக்கான பட்டமளிப்பு விழா, நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு 100 மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “வீட்டு வசதி வாரியத்தின் கீழ் சுயநிதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகள் சிதிலமடைந்து இருப்பதால் வீடு கட்டித் தர வேண்டும் என்ற கோரிக்கை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக அரசு கட்டிடத்திற்கு அனுமதி பெறுவதில் உள்ள பிரச்னைகள் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று களையப்பட்டு உள்ளது. இதில் 2,500 - 3,000 வரை சதுர அடியில் கட்டிடம் கட்ட சுயசான்றிதழ் போதுமானது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெருந்துறையில் புதிதாக சுத்திகரிப்பு மையம் அமைக்கும் பணிகள் 6 மாதத்தில் நிறைவுபெறும். இதனால் தொடர்ந்து ஈரோடு மாநகரப் பகுதியில் பொது சுத்திகரிப்பு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறினார்.