தென்காசி: கடையநல்லூர் ஸ்ரீ முப்பிடாதி அம்மன் திருக்கோயில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு, இரு தரப்புக்கு மத்தியில் ஏற்பட்ட தகராறில், பாதிக்கப்பட்டவர்கள் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் பிரசித்தி பெற்ற முப்பிடாதி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், வைகாசி பிரம்மோற்சவ திருவிழா 10 நாட்கள் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். திருவிழாவின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் மண்டகப்படி உள்ளது. அதன்படி, இரவு முழுவதும் கோயில் முன்புள்ள திடலில் ஆடல், பாடல் கச்சேரி நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில், நேற்று ஒரு சமூகத்தினரின் திருவிழாவின் போது அவர்களுக்கும், அருகில் குடியிருக்கும் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே முன் விரோதம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு பிரிவினர், மற்றொரு பிரிவினரைத் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்தவர்கள், தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி தென்காசி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.